அரச குண்டர்கள் தாக்கினராம்!
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ஜயசிங்க, ஸ்டெப்னி பெர்னாண்டோ மற்றும் தர்மபிரியா விஜேசிங்க உள்ளிட்ட சுமார் 50 பேர் கொண்ட ஒரு அரசாங்கக் குண்டர் குழு, இன்று (2 ஆம் திகதி) அதிகாலை 6 மணியளவில் யக்கலையில் உள்ள முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் ரஜீவ்காந்த் கருத்து வெளியிடுகையில்அலுவலக மதில்களைத் தாண்டிச் சென்று, கதவுகளை உடைத்து உள்ளே இருந்த தோழர்களைத் தாக்கத் தொடங்கினர். தோழர் சுஜித் குருவிட்ட உட்பட கட்சியின் பல உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர், கழுத்தைப் பிடித்து இழுத்து அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார், ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர எதுவும் செய்யவில்லை. பொலிஸார் குண்டர்களுக்கு ஆதரவாக இருந்து, மு.சோ.க. தோழர்களை வளாகத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.
தற்போது, மு.சோ.க. தோழர்கள் அலுவலகத்திற்குள் மீண்டும் அனுமதிக்கப்படவில்லை, அவர்களின் அனைத்து உடமைகள் மற்றும் தளபாடங்கள் போன்றவை இன்னும் அலுவலக வளாகத்திற்குள் உள்ளன. அரசாங்க குண்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மு.சோ.க. கடந்த 13 ஆண்டுகளாக இந்த வளாகத்தை பயன்படுத்தி வந்துள்ளது.
அந்த வளாகத்தின் உரிமை தொடர்பான நீதிமன்ற வழக்கு சமீபத்தில் முடிவுக்கு வந்தது, அதில் உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது, அவர் முன்னர் ஜேவிபி உறுப்பினராகவும் பின்னர் மு.சோ.க. உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஆனாலும், மு.சோ.க. இந்த முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளது. எனவே வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது. இப்போது இந்தத் தீர்ப்பு தொடர்பாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால், ஒரு நீதிமன்ற அதிகாரியை அதற்காக நியமிக்கப்பட வேண்டும். அத்தோடு, அறிவிக்கப்பட்ட திகதிக்குள் வளாக வெளியேற்றம் செய்யப்படவில்லை என்றால், தலையிடும் அதிகாரம் அரசாங்க எம்.பி.க்கள் அல்லது குண்டர்களுக்கு அல்ல, பொலிஸாருக்கே வெளியேற்ற அதிகாரம் உள்ளது! அரசாங்கம் தனது இயந்திரங்களையும், பொலிஸார் உட்பட உத்தியோகத்தர்களையும் துஷ்பிரயோகம் செய்து அற்ப அரசியல் பழிவாங்கலை செய்ய முடியாது.
"அரசியல் மறுமலர்ச்சி" மற்றும் "தூய்மையான நிர்வாகம்" என்று வாக்குறுதி அளித்த ஒரு அரசாங்கத்திற்கு இது நல்ல அறிகுறியாக இல்லை. இத்தகைய அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது!
Post a Comment