தேர்தல் ஆணைய கூற்றின்படி தமிழரசு செயலர் பதவிப்பூசல் இதுவரை தீர்க்கப்படவில்லை! பனங்காட்டான்
கடையடைப்புப் போராட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் இதுபற்றி தாயகத்திலுள்ள வணிகர் அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டதா? அவை ஆதரவு தெரிவித்தனவா? கடையடைப்புக்கு போதியளவு சாதகமான சூழல் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. கட்சியின் பதில் தலைவரும் பதில் செயலாளரும் எடுக்கும் முடிவுகள் கட்சியை மேலும் இக்கட்டுக்குள் கொண்டு செல்லும் போலவே தெரிகிறது.
எங்கு பார்த்தாலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் தனித்து இயங்க முடியாத நிலையே இன்று காணப்படுகுpறது. இதனால் அரசியல் கூட்டு என்பது பொதுவான ஒரு விடயமாக மாறிவிட்டது.
தெற்கில் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தியை சரிக்க வலிமையில்லாத கட்சிகளையும் அமைப்புகளையும் இணைக்கும் முயற்சி முழம் சறுக்கும் நிலையில் காணப்படுகிறது. ரணிலும் சஜித்தும் இருக்கும்வரை இரு தரப்பும் இணைய மாட்டா. இன்னொரு கூட்டை உருவாக்கும் சக்தி மகிந்தவுக்கு இல்லை.
இதனால் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை கையகப்படுத்த முயற்சிக்கிறார் சிங்கள அரசியலில் முதுமை தட்டிய ஜி.எல்.பீரிஸ். பேராசிரியர் என்ற பெயரோடு சிறீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என எல்லாக் கட்சிகளிலும் ஏறி தேசியப் பட்டியலூடாக அமைச்சர் பதவியைப் பெற்று அரசியலில் ருசி கண்ட பூனை இவர். இப்போது இவரும் ஒரு கூட்டு முயற்சியை முன்னெடுத்து சிங்கள அரசியலில் தம்மை ஒரு பீ~;மராகக் காட்டுவதற்கு முயற்சி எடுக்கிறார்.
தமிழர் தரப்பில் சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் வெவ்வேறு திசைகளில் ஓடுகின்றன. தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்ற தொடரில் தமிழ் தேசிய பேரவை ஒரு கூட்டாகியுள்ளது. இதற்குள் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சமூக அமைப்புகளும் அடக்கம். தமிழரசு கட்சி தன்னை அழித்தாலும் பேரவையுடன் சேரத் தயாரில்லை. இங்கு கொள்கைப் பிரச்சனை எதுவுமில்லை. கஜனா, சுமாவா என்ற தலைமைப் போட்டிதான்.
ஜெனிவா மனித உரிமை பேரவை அறிக்கை சமர்ப்பிப்பதிலும் கூட ஒன்றுசேர முடியாது போனால் எப்போது அது சாத்தியமாகும்? மக்கள் மத்தியில் கொஞசம் கொஞ்சமாக இறங்கி வரும் செல்வாக்கை நிமிர்த்த ஒரு கடையடைப்பை சுமந்திரன் அறிவித்துள்ளார். கட்சியின் பதில் தலைவரைத் தவிர கட்சிப் பிரமுகர்கள் வேறெவரும் இது விடயத்தில் இவருக்கு ஆதரவாக இறங்கியிருப்பதாகத் தெரியவில்லை.
ஏதாவது ஒன்றை, அது உண்ணா நோன்போ, சத்தியாக்கிரகமோ, கடையடைப்போ அறிவிக்கும் முன்னர் அதுபற்றி மக்களோடு ஆலோசிக்கப்பட வேண்டும். மற்றைய கட்சிகளோடு இணைந்து முன்னெடுக்க வேண்டும். அதன் பின்னரே காலமும் இடமும் தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த வழிமுறை கடையடைப்பு விடயத்தில் கவனிக்கப்படவில்லை. அதனால்தான் பதினைந்தாம் திகதி என அறிவித்துவிட்டு பதினெட்டாம் திகதிக்கு மாற்றப்பட நேர்ந்தது. பிற்பகல் நான்கு மணிக்கே முடிந்துவிடுமாம். எத்தனை மணிக்கு ஆரம்பிக்குமென சொல்லப்படவில்லை. அவரவர் விரும்பின நேரம் கடையைத் திறந்து மூடக்கூடிய விசித்திர போராட்டம்போல் தெரிகிறது.
கிளிநொச்சி எம்.பி. சிறீதரன் ஏற்பாட்டில் தொடரும் நூறு நாள் சமஷ்டி கோரிக்கைக்கு போட்டியாகவே சுமந்திரன் கடையடைப்பை அறிவித்ததாக சொல்லப்படுகிறது. வவுனியா வர்த்தக சங்கம் கைவிரித்துவிட்டது. கிளிநொச்சியும் அப்படியே போகலாம். யாழ்ப்பாணத்தில் இரண்டும் கலந்த காட்சி காணப்படுகிறது. கடையடைப்புப் போராட்டம் பிசுபிசுக்குமானால் இது கட்சியைப் பெரிதும் பாதிக்கும். தமிழரசு கட்சியின் மானம் கப்பலேற்றப்படும். அநுரவின் வடபகுதி அமைச்சராக விளங்கும் இராமலிங்கம் சந்திரசேகருக்கு நல்ல தீனி கிடைக்கும். மொத்தத்தில் தமிழ்த் தேசியமே அவமானப்பட நேரும்.
தமிழரசு கட்சியின் இப்போதைய நிலைமையை அரசியல் நோக்கர்கள் எவ்வாறு கூர்ந்து பார்க்கின்றனர் என்பதற்கு கடந்த ஒரு வாரத்துள் வெளியான சில விடயங்களை உதாரணமாக இங்கு பார்க்கலாம்:
• தமிழ் மிரர் வெளியீட்டில் கடந்த பதினோராம் திகதி வெளியான கட்டுரையின் தலைப்பு - ஒற்றுமையின்மையே தமிழரின் இயலாமை - என்பது. இக்கட்டுரையின் இறுதிப் பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது. 'ஈழத்தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக் கொள்ளவும், ஈர்த்துக் கொள்ளவும் பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடியவாறு நகர்ந்து சூழலில் தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை மேலும் பயனற்ற எதிர்காலத்தையே கொண்டு வரும். இது தமிழரசு கட்சிக்கும் புரிய வேண்டும். இல்லாதுவிடின் மக்களால் புரிய வைக்கப்படுவதே நல்லது".
• வீரகேசரிப் பத்திரிகையில் கடந்த பத்தாம் திகதி வெளியான ஒரு கட்டுரையின் தலைப்பு - தமிழரசு நழுவ விட்ட வாய்ப்பு - என்பது. இக்கட்டுரையின் இறுதிப் பகுதி பின்வருமாறு உள்ளது. 'தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதி, பொறுப்புக்கூறல் என்பவை உறுதி செய்யப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இவைகளின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை பாரப்படுத்துவதுதான் முழுமையான வெற்றி. அந்த வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, அதற்கு உரிமை கோரக்கூடிய நிலையை தக்க வைத்துக் கொள்ள தமிழரசு கட்சி தவறி விட்டது என்பதே உண்மை".
• கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகையின் ஆகஸ்ட் மாத இதழில் பேராசிரியர் துரை மனோகரன் தமது பத்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 'முன்னொரு காலத்தில் தமிழ் மக்களுக்கென்று ஒரு வீடு இருந்தது. அந்த வீடு தங்களை எப்போதும் பாதுகாக்கும் என்று மக்கள் நம்பியிருந்தனர். அந்தோ பரிதாபம்! வீடு இன்று சின்னாபின்னமாகி சிதறிக் கிடக்கிறது. தலைமைத் தகைமைகள் எதுவுமற்ற ஒரு தலையாட்டிப் பொம்மை வீட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கிறது. சட்டம் தெரிந்த தந்திரசாலி கைப்பொம்மை போல பிறிதொருவர் இசைந்து நடக்கிறார். சமீபத்தில் வீட்டுக்காரர்கள் ஒருபோதும் சேரக்கூடாத ஒரு கூட்டத்தோடு சேர்ந்து கொஞ்சம் நஞ்சம் இருக்கிற மரியாதையையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்".
மேற்குறிப்பிட்ட விடயங்களை எழுதிய மூவரும் தங்களுக்குள் உரையாடிவிட்டு எழுதியவையல்ல இவை. மூன்று ஊடகங்களும் வெவ்வேறு தளத்தில் வெளிவருபவை. மக்களின் மனவோட்டத்தைப் புரிந்து, தமிழரசின் போக்கை அறிந்து இவர்களால் எழுதப்பட்டவை. தமிழரசுக் கட்சி இந்த விமர்சனங்களை உள்வாங்கப் பழக வேண்டும்.
கட்சியின் பதில் செயலாளராகவிருந்த வவனியா சத்தியலிங்கத்தின் இடத்துக்கு நியமனமானவர் தம்மை பதில் செயலாளரென அழைக்காது செயலாளரென குறிப்பிடுமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்துகிறார். சத்தியலிங்கம் பதில் செயலாளராக இருந்தவரென்றால் அந்த இடத்தை நிரப்புபவரும் அவ்வாறே பதில் செயலாளரென அழைக்கப்பட வேண்டியவர். ஆனால், இப்போதைய புதிய பதில் செயலாளர் அதனை கௌரவக்குறைவாக நினைக்கிறார் போலும்.
இவர் தமது அசுரத்தனத்தைக் காட்ட அறிவித்துள்ள கடையடைப்பு தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமானால் அதன் பாதிப் பங்கு பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தையும் சாரும். இதனை அவர் நிச்சயமாகப் புரிந்திருப்பார். இதனையும் இயற்கையின் நியதி என்று சொல்ல மாட்டாரென நம்புவோம்.
இதனை எழுதிக் கொண்டிருக்கையில் சிலோன் ருடே பத்திரிகையின் ஆகஸ்ட் 9ம் திகதி வெளியீட்டில் இடம்பெற்ற முக்கியமான செய்தியொன்று கண்ணில்பட்டது. புதிதாக எழுபது அரசியல் கட்சிகள் தங்களை பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் சமன் சிறீ ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக தலைப்பிட்டுள்ள இச்செய்தியின் நான்காம் பந்தி பின்வருமாறு உள்ளது:
யூன் இரண்டாம் திகதிய நிலைவரப்படி அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளும் தங்கள் பொதுச்செயலாளர் தொடர்பான பூசலுக்கு தீர்வு காணவில்லை. இந்தக் கட்சிகளின் பட்டியலில் முதலாவதாக இலங்கை தமிழரசு கட்சி இடம்பெற்றுள்ளது. மற்றைய ஐந்து கட்சிகளின் பெயர்களையும் மேலுள்ள ஆங்கிலப் பந்தியில் படிக்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவிப் பூசல் சட்டப்படி இதுவரை தீர்வு காணப்படவில்லையென்பது பகிரங்கமாகியுள்ளது. இந்த விண்ணாணத்தில் தமிழரசு கட்சியின் செயலாளர் தாமே என்று கூறி அறிக்கைகள் விடும் பதில் செயலாளர் எவ்வகையான பதவி ஆசையுடன் கட்சியை வழிநடத்துகிறார் என்பதை எவராலும் சொல்ல முடியாதுவிட்டால், கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரனாவது முன்வந்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இது அவருக்கான காலத்தின் கடமை.
Post a Comment