யாழில். நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன - மனம்வருந்திய ஆளுநர்


புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை பல ஆயிரம் புத்தகங்களோடு தீயிட்டு எரித்தார்கள் என்பதைச் சிந்தித்தோம் என்றால், புத்தகங்களின் அருமை எமக்குத் தெரியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில், யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றமும், எங்கட புத்தகங்கள் அமைப்பும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது சர்வதேச புத்தகக் கண்காட்சியை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்து பிரதம விருந்தினர் உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் தெரிவிக்கையில், 

நாம் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் போது இடைநடுவில் ஏதாவது இடையூறு வந்தால் எரிச்சலாகத்தான் இருக்கும். ஒரு புத்தகத்தினுள் மூழ்கினோம் என்றால் அப்படித்தான் இருக்கும். ஒரு புத்தகத்தை படித்தால் அடுத்த புத்தகமும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு ஏற்பட வேண்டும். நாம் வாசிப்பதால் ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. 

இன்று போட்டிப் பரீட்சைகளில் நுண்ணறிவு வினாக்களுக்கு மேலதிகமாக பொது அறிவு வினாக்களும் கேட்கப்படுகின்றன. புத்தகங்களை வாசித்திருந்தால் மாத்திரமே எம்மால் அவற்றில் சித்தியடைய முடியும். 

இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எங்கள் அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன. அது தொடர்பில் வருந்துகின்றேன். எங்கள் அதிகாரிகளின் மனங்களில் மாற்றம் வரவேண்டும் என்றுதான் நான் பல தடவைகள் சொல்லியிருக்கின்றேன். நேர் சிந்தனையில் அவர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை என்பதுதான் பிரச்சினை. எங்களுக்கு வருமானம் தரக்கூடிய விடயங்களுக்கு தேவையான ஒழுங்குகளைச் செய்து கொடுக்கின்றார்கள் இல்லை. 

நாங்கள் முதலீட்டாளர்களை வாருங்கள் என்று அழைக்கின்றோம். ஆனால் எங்கள் அதிகாரிகளில் சிலர் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள் இல்லை. ஏன் அப்படி நடந்துகொள்கின்றார்கள் என்பது தெரியவில்லை. 

முதலீட்டாளர்கள் வந்தால்தான் எங்களுக்கு வரி வருமானம் கிடைக்கும். வரி வருவாய் கிடைத்தால்தான் நாங்கள் முன்னேற முடியும். ஏன் இவற்றை அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை. இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நிச்சயம் முயற்சிக்கின்றோம் என ஆளுநர் தெரிவித்தார். 


No comments