செம்மணிப் படுகொலை: கொழும்பில் ஆதரவுப் போராட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் கலந்துகொண்டோர்,'புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து' போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்,   சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். 

இதன்போது போராட்டகாரர்கள், பேரணியாக முன்னோக்கி நகர்த்த முற்பட்ட வேளை, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

தற்போது போராட்டக்களத்தில் கலக்கமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை  தமது போராட்டம் குறித்து தெரிவித்துள்ள  நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் 1990 இன் பின்னர் வடக்கிலும் தெற்கிலுமாக புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டனஇ துரையப்பா விளையாட்டரங்கு மிருசுவில் மன்னார் சாதொச கட்டிட தொகுதி  மாத்தளை  போன்ற இடங்களிலும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் அவற்றை தேடுவதிலோ அதற்கான நீதியை நிலைநாட்டுவதற்காக  எந்த ஆட்சியாளரும் துணியவில்லை  பட்டலந்த வதை முகாம் சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் தற்போது இது குறித்து மௌனமே நிலவுகின்றது என தெரிவித்துள்ளனர்.

அரசபயங்கரவாதத்தின் கோரப்பிடிக்குள்  1971-1988-89  காலப்பகுதியில்  சிக்கி கொடுமைகளை  அனுபவித்த மக்க  விடுதலை முன்னணியினர் ஆட்சியில் இருந்தாலும்  அவர்களும் கடந்த கால  ஆட்சியாளர்களை போலவே  குற்றவாளிகளை  பாதுகாக்கும் நிலையிலேயே உள்ளனர் ஆதலால்  இவர்கள் காலத்திலும் பாதிக்கப்பட்டோருக்கு  நீதி கிட்டப்போவதில்லை  என்பது திண்ணம் என தெரிவித்துள்ளனர்.


No comments