செம்மணி குழந்தைகள் ஒரே குடும்பத்தவையா?



செம்மணி மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட சிறுகுழந்தைகளது எலும்புக்கூட்டுத்தொகுதி மீதான ஆய்வுகளையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களினுடையதாக அவை இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே நீலநிறப்புத்தகப்பை மற்றும் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி தொடர்பான அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றுடன் அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்தோடு , சிறுவர்களுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத்தொகுதிகளுக்கும் புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத்தொகுதிக்கும் இடையே உடைகள் மற்றும் என்பியல் சார்ந்த ஒத்த தன்மைகள் இருப்பதாகவும் மருத்துவ அதிகாரி பிரணவன் மன்றில் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு என்புத்தொகுதிகளிலும் என்பியல் ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவானால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments