வடக்கில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இராணுவத்திடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது
வடமாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இராணுவத்தினரிடம், ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன் போதே வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
அதேவேளை இக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எமது திணைக்களங்களால் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல தடவைகள் கலந்துரையாடப்பட்டாலும் செயற்பாட்டு ரீதியில் அதன் தாக்கத்தை மக்களால் உணர முடியவில்லை. எமக்கு தினந்தோறும் மக்களிடமிருந்து வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் அனுப்புகின்றனர்.
தென்னையை வாழ்வாதாரமாகக் கொண்டு வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. எனவே அவர்களின் பாதிப்புக்களை கருத்திலெடுத்து இதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
2023ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெள்ளை ஈ தாக்கம் பரவியபோது எடுக்கப்பட்ட முயற்சிகளின் அளவைக்கூட இப்போது காண முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தால் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதன் பணிப்பாளர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.
தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் சில விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்
Post a Comment