கதிரை முக்கியம்:பாய்ச்சலில் தலைவர்கள்?



தேர்தல் பரபரப்பின் மத்தியில் வடகிழக்கு தமிழர் தாயகத்திலும் பாய்ச்சல்கள் வெளிநடப்புக்கள் முனைப்படைந்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்ட வேட்பாளர் பட்டியல் நேற்றைய தினம் வவுனியாவில் வெளியிடப்பட்டிருந்தது.எனினும் வேட்பாளர் பட்டியலில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களிற்கே சந்தர்ப்பமளித்துள்ளதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நிலையில் மூத்த தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார்.அதேபோன்றே மூத்த தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசாவும் வெளியேறியுள்ளார்.

அதேவேளை  சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.


தேர்தலில் வாக்குகள் எண்ணப்படுகையில் தமிழரசுக் கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் தனக்கு எதிராகச் சதி செய்திருந்ததாக சசிகலா குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை என்றும் சசிகலா குற்றஞ்சாட்டியிருந்தார்.


No comments