முன்னணி, ஈபிடிபி - சொத்து பிரகடனம்!

நாடாளுமன்ற தேர்தலிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் முன்னணி கட்சிகள் பலவும் வடக்கில் மும்முரமாகியுள்ளன.

இன்றைய தினம் திங்கட்கிழமை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  யாழ் மாவட்டச் செயலகத்தில் தனது வேட்புமனுவை  கையளித்துள்ளது.

அதேவேளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் இன்று திங்கட்கிழமை (07) யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் கடன் விபரங்களை வேட்புமனுவுடன் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments