மாவை இருக்கிறாரா? இல்லையா? குழப்பம்!
தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர்
கடிதம் எதனையும் தனக்கு அனுப்பி வைக்கவில்லை என கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா தான் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்கி உள்ளதாகவும் உறுப்புரிமையில் மாத்திரம் தமிழரசுக் கட்சியில் இருப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.அத்தோடு கட்சியின் செயலாளரும் வன்னிமாவட்ட வேட்பாளர்களுள் ஒருவருமாக சத்தியலிங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வைத்திய கலாநிதி சத்தியலிங்கமோ அவ்வாறான எவ்விதமான கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜா கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலக திட்டமிட்டுள்ளதாக அவரது மகன் கலை அமுதன் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் கலையமுதன்; தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை இறுதி பட்டியலை நியமனக்குழு நேற்று (6.10.2024) வெளியிட்டுள்ளது. பட்டியலில் புதுமுகங்கள் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சார்பானோருக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதைத் தொடர்ந்து கட்சியின் இந்த முடிவு தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அதிருப்தியில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கட்சித் தலைமைக்கு எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறிச் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.
Post a Comment