உடன்படிக்கை மீறப்படுமானால், நாட்டின் எதிர்க்காலம் கேள்விக் குறியாகும்


சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் செய்துக் கொண்ட உடன்படிக்கை மீறப்படுமானால், நாட்டின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தக தொகுதியை நேற்று பிற்பகல் திறந்து வைத்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று துறைமுக நகரத்தில் இந்த வரியில்லா வர்த்தக தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளமை மிக முக்கியமானதாகும்.

இலங்கையின் சுற்றுலா துறை உலக அளவில் பிரசித்தம் பெற்றுள்ளது.

இந்த வர்த்தகக் கட்டிட தொகுதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள்.

அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் வணிக வளாகங்களை நிர்மாணித்து இந்த துறைமுக நகரத்தை மேம்படுத்தியுள்ளோம்.

இது துறைமுக நகரத்தின் ஆரம்பமாக மட்டுமே அமையும். துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமக்கு இருக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதன் காரணமாகவே இன்று இப்பணியை செய்ய முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் இந்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு நாம் உடன்படிக்கை செய்துள்ளோம்.

அந்த ஒப்பந்தங்களை மாற்றாமல் தொடர்ச்சியாக கொண்டுச் சென்றால் இலங்கைக்கு நல்ல எதிர்காலம் கிட்டும். அந்த உடன்படிக்கைகளில் திருத்தம் செய்ய முற்பட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

குறிப்பாக 100 நிறுவனங்கள் இன்று துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன.அதில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளன. மேலும், கொழும்பு கோட்டையில் புதிய சுற்றுலா வலயத்தை ஆரம்பிக்க உள்ளோம். இதனால், இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பொலிஸ் தலைமையகம் இடம் மாற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் புதிய கட்டிடத்திற்கு மாறுகிறது. குடியரசு சதுகத்தையும் புதுப்பித்து, அந்தப் பகுதியை சுற்றுலா வலயமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பழைய தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும்.

பழைய துறைமுகம் மற்றும் அதன் இறங்குதுறை மற்றும் பழைய சுங்க கட்டிடம் உள்ளிட்ட அனைத்தையும் சுற்றுலா அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும். கடற்படைத் தலைமையகம் தற்போது அக்குரேகொடைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பழைய இடத்தில் புதிய ஹோட்டல்களை அமைக்கலாம்.

தற்போதுள்ள ஜனாதிபதி மாளிகை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விரிவான சுற்றுலாத்துறையை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய சுற்றுலா பயணிகளை அதிகளவில் அழைத்து வர வேண்டும். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும்.

இரண்டு வருடங்களில் இப்படியொரு வணிக வளாகத்தை ஆரம்பிக்க முடிந்ததற்கு பெருமைப்பட வேண்டும். 7000 சதுர மீட்டருக்குள் 03 உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் வர காத்திருக்கின்றன. நாட்டின்பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து இந்த துறைமுக நகரை உலகப்புகழ் பெற்ற மையமாக மாற்றுவோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments