புத்திர பாசத்துக்கும் மித்திர நேசத்துக்கும் நடுவில் தத்தளிக்கிறார் மகிந்த! பிரிவையும் பிளவையும் ஆயுதமாக்கி வியூகம் வகுக்கிறார் ரணில்! பனங்காட்டான்


மகனை அரியாசனம் ஏற்ற முயலும் மகிந்தாவால் ரணிலை பதவியிறக்க மனதார விருப்பமில்லை. இதனால் புத்திர பாசத்துக்கும், மித்திர நேசத்துக்கும் இடையில் அல்லாடுகிறார். ஆடும்வரை ஆட்டம் நடத்தி எல்லாத் தரப்பையும் பிளந்து ஜனாதிபதிக் கதிரையை தொடர்ந்து வைத்திருக்க முயலுகிறார் ரணில். இரண்டுக்கும் அப்பால், தங்களின் பொதுவேட்பாளரை நிறுத்துவதில் முனைப்பாக நகர்கிறது தமிழர்தேச அரசியல். 

1982லிருந்து 2019ம் ஆண்டு வரையான 37 வருடங்களில் இலங்கை எட்டு ஜனாதிபதித் தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால், இந்த வருடம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் தேர்தலைப் போன்ற இழுபறிகள், கட்சித் தாவல்கள், கழுத்தறுப்புகள் போன்று இதுவரை எந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இடம்பெறவில்லை. 

தேர்தல் ஆணையக அறிவித்தலின் பிரகாரம் வேட்பாளர் மனுத்தாக்கலுக்கு பத்து நாட்கள் உள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு நாற்பது நாட்கள் உள்ளன. இதற்கிடையில் என்ன நடைபெறுமென்று நினைக்க முடியாத வகையில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் தங்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். 

மேற்கு நாடுகளில் இருவர் சட்டபூர்வமாக திருமணம் புரியாமல் கூடி வாழ்வது (டுiஎiபெ வழபநவாநச) போன்று அரசியல் பிழைப்பு நடத்திய ரணில் தரப்பும் மகிந்த அணியும் பிளவுபட்டு நிற்கின்றன. ஆனால், மகிந்தவும் ரணிலும் இரவு வேளைகளில் மூடிய அறைக்குள் தனியாக சந்தித்து உரையாடி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நிலைமையை உன்னிப்பாகப் பார்க்கின், புத்திர பாசத்துக்கும் மித்திர நேசத்துக்குமிடையில் மகிந்த தத்தளிப்பதுபோலத் தெரிகிறது. 1990களின் ஆரம்பத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அவரது ஏகபுதல்வர அனுர பண்டாரநாயக்க அரசியல் ரீதியாகக் கொடுத்த நெருக்கடிக்கு ஒத்ததாக மகிந்தவின் நிலைமையைச் சொல்லலாம். 

விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தியதுபோல பொதுஜன பெரமுனவையும் ரணில் பிளவுபடுத்துகிறார் என்று நாமல் பொதுவெளியில் தெரிவித்தபோதே, ரணிலுக்கான ஆதரவை பெரமுன வழங்குவதற்கு அவர் விரும்பவில்லையென்பது தெரியவந்தது. பெரமுனவை தங்களின் குடும்பக் கட்சியாகப் பார்த்து, தமது கதிரைக் கனவை வளர்த்துக் கொண்டிருப்பவர் நாமல். இது மகிந்தவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இப்போது மகனுக்கு அந்தப் பக்குவம் வரவில்லையாதலால் இன்னொரு தவணையை ரணிலுக்கு வழங்கி அந்த ஆதரவுத் தளத்தில் நாமலை அதற்கடுத்த தேர்தலில் வெற்றிபெறச் செய்யலாமென்பது மகிந்தவின் கணிப்பு. 

ஆனால், நாமலுக்கு அதுவரை காத்திருக்கும் பொறுமை இல்லை. சிறிமாவோவின் விருப்பத்துக்கு எதிராக அளவுக்கு மீறிய அனுர பண்டாரநாயக்க கடைசியாக பிரதமர் பதவிகூட கிடையாது போன வரலாறை நாமல் புரிந்து கொள்வாரானால் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. 

பொதுஜன பெரமுன பகிரங்கமாக தம்மை ஆதரிப்பதை ரணில் விரும்பவில்லையென்பது இன்னொரு பக்க விடயம். போர் வெற்றியாளர்கள் என்ற முகத்துடன் இருப்பவர்களின் ஆதரவு தமக்கு பகிரங்கமாகக் கிடைக்குமானால் சிறுபான்மை மக்களின் - முக்கியமாக தமிழரின் வாக்குகள் தமக்குக் கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும். அதனால் பெரமுனவை பிளவுபடுத்தி, தம்மை சுயாதீன வேட்பாளராக நிறுத்தி அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவைப் பெறுவதே ரணிலின் மூல இலக்கு. 

இந்தப் பாதையில் அவர் இதுவரை வெற்றிநடை போடுவதாக கருதப்படுகிறது. பெரமுன தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்துவதென்ற முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்ட அதே இரவு, பெரமுனவின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலைச் சந்தித்து தமது ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். மைத்திரிபால சிறிசேன மகிந்தவுடன் அப்பம் சாப்பிட்ட மறுநாள் ரணில் அணியுடன் இணைந்து ஜனாதிபதியான கதை போன்றது இது. ரணிலை ஆதரிக்கும் பெரமுனகாரர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், வருங்காலத்தில் இப்பதவிகளை எதிர்பார்த்திருப்பவர்கள். 

கட்சியின் முடிவை மீறுபவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அதன் செயலாளர் சாகல ரட்ணநாயக்க அறிவிக்க, உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கும் நோக்கமில்லை, அடுத்து வரவுள்ள பொதுத்தேர்தலிலேயே நாம் நாட்டமாக உள்ளோம் என நாமல் தெரிவித்திருப்பது அவர்கள் தரப்பிலுள்ள பலவீனத்தையே புட்டுக்காட்டுகிறது. 

இதனையே தமக்கான சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார் ரணில். தாம் தலைவராக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி சார்பிலோ, தம்மை ஆதரித்து வந்த பெரமுன சார்பிலோ போட்டியிடவில்லை எனக்கூறிக் கொண்டு, எங்கிருந்தும் எவரும் வரலாமென அழைத்துக் கொண்டிருப்பதே ரணிலின் இன்றைய வியூகம். 

திடீரென இவருக்கு அதிர்ஸ்டம் அடித்ததுபோல் பிரதமர் டினேஸ் குணவர்த்தனவின் எம்.ஈ.பி. கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளது. ரணிலுடனான பேச்சுவார்த்தையின்போது பிரதமர் பதவியை நாமலுக்கு வழங்க வேண்டுமென மகிந்த தரப்பால் கேட்கப்பட்டது. அதனை உடனடியாகவே ரணில் நிராகரித்துவிட்டார். தமது பதவியை பறிப்பதற்கு ராஜபக்சக்கள் எடுத்த நடவடிக்கை காரணமாகவே ரணிலை ஆதரிக்கும் முடிவுக்கு டினேஸ் குணவர்த்தன வந்தாரென கூறப்படுகிறது. 

ரணிலும் டினேஸ் குணவர்த்தனவும் 1949 மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள். இருவரும் றோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கல்வி கற்று இணைபிரியாத் தோழர்களாக இருந்து வருபவர்கள். இதன் அடிப்படையிலேயே முதன்முதலாக டினேஸை பிரதமர் பதவிக்கு ரணில் 2022ல் நியமித்தார் என்பதும், இதன் தொடர்ச்சியாகவே ரணிலுக்கான ஆதரவை டினேஸ் வெளியிட்டுள்ளார் என்பதையும் மற்றைய அரசியல்வாதிகள் குறிப்பிட்டு வருகின்றனர். 

இத்தேர்தலில் ரணில், சஜித், அனுர குமார ஆகிய மூவருமே பிரதான வேட்பாளர்கள். பெரமுனவும் ஒருவரை இறக்குமானால் நான்முனைப் போட்டியாகலாம். இந்தப் பின்னணியில் இவர்கள் எவருமே முதற்சுற்றில் ஐம்பது வீத வாக்குகளைப் பெறும் சாத்தியமில்லை. ஆறில் ஐந்து பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1982ல் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் 52.91 வீத வாக்குகளையே பெற முடிந்தது. அடுத்த ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச 1988 தேர்தலில் 50.43 வீத வாக்குகளையே பெற்றார். 

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களில் ஆகக்கூடிய வாக்குகளாக 62.28 வீத வாக்குகளை 1994ல் பெற்ற சந்திரிகா குமாரதுங்க, 1999 தேர்தலில் 51.12 வீத வாக்குகளையே பெற்றார். இறுதியாக 2019ல் இடம்பெற்ற தேர்தலில் 69 லட்சம் சிங்கள வாக்குகளைப் பெற்றவரென அறைகூவிய கோதபாய ராஜபக்சவுக்கு 52.25 வீத வாக்குகளே கிடைத்தன. 

இதனை ஓர் அளவுகோலாக வைத்துப் பார்க்கின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் எவருமே முதற்சுற்றில் ஐம்பது வீத வாக்குகளைப் பெறும் வாய்ப்பில்லை. இதனால், பின்தங்கிய வேட்பாளர்களின் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட வேண்டிய தேவை ஏற்படும். அவ்வேளையிலும் ஐம்பது வீத வாக்குகளுக்கு நிச்சயமில்லை. 

இதனை தமிழர் தரப்பு சரியாகப் புரிந்து கொள்ளுமானால் தமிழ் பொதுவேட்பாளர் அவசியமென்பதை ஏற்றுக் கொள்ளும். இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தள்ளி வீழ்த்தப்பட்ட ரணில் 19 வருடங்களின் பின்னர் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். கடைசியாக இடம்பெற்ற மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் முறையே சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு தமிழர்கள் வாக்களித்தது இவர்கள் வெல்ல வேண்டுமென்பதற்காக அல்ல. ராஜபக்சக்களை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகவே. 

இன்றுள்ள கள நிலைவரம் முற்றிலும் வேறானது. சிங்களவர் ஒருவர் வெல்வதை தமிழ் வாக்குகளால் தோற்கடிக்க முடியாது. ஆனால், தமிழ் வாக்குகள் ஒருங்கிணநை;து தமிழ் பொதுவேட்பாளருக்கு அளிக்கப்படுமாயின், வெற்றி பெறும் சிங்கள ஜனாதிபதி ஐம்பது வீத வாக்குகளைப் பெறுவது கடினமாக இருக்கும். அவ்வாறான ஒரு நிலைமையை ஏற்படுத்துவதே பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான அடிப்படைக் குறி. 

தமிழ்ப் பொதுவேட்பாளர் வெற்றி பெறுவதற்காக போட்டியிடவில்லை. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும் அரசியல் பலத்தையும் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும என்பதே இதன் முக்கிய அம்சம். 

விளங்கும் வகையில் சொல்வதானால் - 1977 பெதுத்தேர்தலில் தமிழர் தேசம் ஒன்றுபட்டு ஒரே குரலில் நின்று ஆகக்கூடியதாக 22 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் பெற்றதை நினைவிற்கொள்வது சாலச்சிறந்தது. 

No comments