சபாநாயகரிடம் ஆதரவு கோரும் சிறீதரன்!சந்தேகத்திற்கிடமான ஆயுத நபர்களிடமிருந்து தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த நாடாளுமன்ற சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது வீட்டையும் அதனைச் சூழவுள்ள பகுதியைச் சுற்றிலும் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று இரவு வேளையில் பயணிப்பதாக கடந்த 7ஆம் திகதி சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் முகத்தையும் தலையையும் ஆடைகளால் மறைத்துக்கொண்டும், தலைக்கவசம் அணிந்துகொண்டும், மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் சிசிடிவி கமரா காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை காவல்துறையில் முறைப்பாடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்றும், முன்னர் இவ்வாறு முறைப்பாடு செய்த பின்னர், 200 பாதுகாப்புப் படையினர் ஒரே நேரத்தில் தனது வீட்டை முற்றுகையிட்டு வீட்டைச் சோதனையிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பின்மை இருப்பதாகவும் தெரிவித்தே சபாநாயகருக்கு சி.சிறீதரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனிடையே மன்னார் பகுதியில் முன்னாள் போராளியொருவர் சர்ச்சைக்குரிய வகையில் வாகனத்தால் மோதி கடந்தவாரம் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments