செல்வத்திற்கு புதிய கதிரை வேண்டுமாம்!
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன், இன்று (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் சண்முகம் குகதாசன் இருந்துள்ள நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
இதனிடையே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோருக்கு ரெலோவின் செயலாளர் நாயகம் தனித்தனியே ஆதரவு கோரி கடிதங்களை இன்று அனுப்பி வைத்துள்ளார்.
கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுள் கடந்த காலங்களில் பல உள்வீட்டுப் பிரச்சினைகள், மனவேதனைகள் வந்தபோதும் நாங்கள் நாடாளுமன்றத்தினுள் எமது மக்களின் தேவை, நன்மை கருதி ஒற்றுமையாகத்தான் செயற்பட்டு வந்தோம். அந்த அடிப்படையில் தொடர்ந்தும் ஒற்றுமையாக நாடாளுமன்றத்தினுள் செயற்பட விரும்புகின்றோம்.
எனவே, ஏற்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கான வெற்றிடத்தை எல்லோருடைய சம்மதத்துடனும் நிரப்புவதற்கு விரும்புகின்றோம்.
நாடாளுமன்ற சிரேஸ்ட தன்மை மற்றும் நீண்டகாலமாக, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே, 26 வருடங்களுக்கு மேலாகப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக செல்வம் அடைக்கலநாதன் இருந்துவருகின்றார்.
அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment