பிஸ்கெட் போடும் ரணில் அரசு!



இரண்டாவது நாளாக இன்றும் இலங்கை முழுவதும் அரச அலுவகங்கள் முடங்கியுள்ள நிலையில் நேற்றும்(08) இன்றும்(09) கடமைக்கு சமுகமளித்த நிறைவேற்றுத்தரம் அல்லாத அனைத்து  அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டு சான்றிதழை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் அது தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. 

அரச சேவையின் நிறைவேற்றுத்தரம் அல்லாத சில சேவைகளில் உள்ள ஒருசில தொழிற்சங்கங்கள் நேற்றும் இன்றும் சுகவீன விடுமுறை மற்றும் வேலைநிறுத்த தொழிற்சங்க  நடவடிக்கைகளை அறிவித்திருந்தன. 

கடுமையான பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்நோக்கியிருந்த நாடு கடந்த 2 வருடங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான பொருளாதார கொள்கை சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஓரளவு ஸ்திரப்படுத்த முடிந்ததுடன், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு மேலதிகமாக அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கியது. 

தற்போதைய நிதி நிலைமையின் கீழ், மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்தாமல், முழு அரச சேவைக்கும் தற்போது வழங்கப்படும் சம்பளத்திற்கு மேலதிகமாக சம்பள அதிகரிப்பையோ கொடுப்பனவுகளையோ வழங்குவதற்கு சாத்தியமில்லை எனவும் திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற நியாயமற்ற பணிப்புறக்கணிப்புகளில் ஈடுபடாது, நேற்றும் இன்றும் பணிக்கு சமுகமளித்த நிறைவேற்றுத்தரம் அல்லாத அரச உத்தியோகத்தர்களை பாராட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments