பொதுவேட்பாளர் முறைமை வருமானால் தங்களின் எதிர்காலத்தை நினைத்து 'இவர்கள்' அச்சமடைகின்றார்களா? பனங்காட்டான்
படிமுறை வளர்ச்சி என்று தமிழில் ஒரு சொற்பதம் உண்டு. எதனையும் எழுந்தமானமாக செய்யாமல் நிதானமாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி ஒரு காரியத்தை வெற்றிகரமாக மேற்கொள்வது என்பது இதன் அர்த்தம்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிப்பிட்ட காலத்துக்கு மாதங்கள் நெருங்கிக் கொண்டிருக்கையில், இனரீதியாக இரு தரப்பிலும் படிமுறை வளர்ச்சி கைக்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இதற்கு உதாரணமாக ஜனாதிபதி ரணில் தரப்பையும், தமிழ் பொதுவேட்பாளர் தரப்பையும் குறிப்பிடலாம். இவ்விரு தரப்பும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், நாலாபக்கத்தாலும் நாடி பிடித்து, இரத்தோட்டத்தை அளந்து கொண்டிருக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறுமென்பதை ரணில் அறிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படுமா என்ற சர்ச்சை (இதனை உருவாக்கியவரே ரணிலின் கட்சியின் செயலாளரான பாலித ரங்கே பண்டாரவே) கிளம்பியபோது, நேரடியாக பதிலளிக்காது தமது அலுவலக அறிக்கையூடாக திட்டமிட்டவாறு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென்று ரணில் அறியக்கொடுத்தார்.
ஆனால் இன்னமும் தாம் போட்டியிடப் போவதை நேரடியாக அவர் அறிவிக்கவில்லை. அநேகமாக யூலை மாதத்தில் அவர் அறிவிப்பாரென அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில் தமது முடிவை அறிவிப்பதை இழுத்தடிக்க, மகிந்த ராஜபக்ச தரப்பும் தங்கள் பக்க முடிவை அறிவிப்பதை பின்போடுகிறது. சிலவேளைகளில் இரண்டும் இணைவதற்கான தேவையாகவும் இருக்கலாம்.
தமது தேர்தல் பரப்புரைகளுக்கு வடக்கில் பிள்ளையார் சுழி போட்ட ரணில், தேர்தலுக்கான அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக இப்போது திறந்து வைத்துள்ளார். அவரது மனைவி, கட்சியின் அக்கிராசனர், பிரதம ஆலோசகர், பிரதமர், சில அமைச்சர்கள் உட்பட பொதுஜன பெரமுனவின் சில தலைகளையும் இந்நிகழ்வில் காண முடிந்தது. முக்கியமான ஒருவரை இந்நிகழ்வில் காணவில்லை. ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்குப் பின்போட வேண்டுமென்ற கருத்தை முன்வைத்து, பலரையும் விழி பிதுங்க வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார ஏன் தலைமறைவானார் என்பது தெரியவில்லை.
கட்சியின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்ததன் ஊடாக ரணில் போட்டியிடுவாரென்பது உறுதியாகியுள்ளது. ஷரயில் ஓடத்தொடங்கிவிட்டதுஇ ஏறுபவர்கள் ஏறலாம், இடையிலும் ஏறலாம், எல்லோருக்காகவும் அதன் கதவுகள் திறந்துள்ளன| என்ற பாணியில் மாற்றுக் கட்சியினரை உள்வாங்கும் வேலைக்கு இந்த அலுவலகம் முக்கியமானது.
சில வாரங்கள் பலருக்கும் அவகாசம் கொடுத்து, இறுதியில் யாருடன் கூட்டுச் சேர்வது என்பதை தீர்மானிப்பதே ரணிலின் இலக்கு. இப்போது சஜித் பிரேமதாசவை இவருடன் இணைப்பதற்கு திரைக்குப் பின்னால் ரகசியப் பேச்சுகள் இடம்பெறுகின்றன. அதேசமயம் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடனும் இவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் சஜித்தும் ரணிலும் தனிமையில் சந்தித்து பேச்சு நடத்தினர். ரணிலுடன் சஜித் அணி இணையப் போவதாகவும் அப்போது ஒரு பேச்சு அடிபட்டது. இவர்களின் பேச்சுவார்த்தையின் ஒரு கட்டத்தில் தனது கட்சியை பிளவுபடுத்தி எவரையும் இழுத்தெடுக்க வேண்டாமென்ற சஜித் ரணிலிடம் நேரடியாகவே வேண்டினார். அப்போது ரணில் - நான் எவரையும் இழுத்தெடுத்து உங்கள் கட்சியை பிளவுபடுத்த மாட்டேன். உங்கள் கட்சி ஆட்களை கவனமாக நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற சஜித்தின் கேள்விக்கு பல ஊகங்கள் தொக்கி நிற்கும் வகையில் பதிலளித்தார்.
இப்போது எல்லா வகையான நாடகங்களுமே தெற்கில் நடைபெறுகின்றன. பல கட்சிகளும் சொரியல்களும் தேர்தலுக்காக கூட்டாக இணைவதும், மந்திகளிலும் பார்க்க வேகமாக தாவுவதற்கு பலர் தயாராக இருப்பதும், ஒரு சிலர் கட்சி மாறி பாய்வதும் காணப்படுகிறது. தமிழர் தரப்பிலிருந்தும் ஒரு சிலர் தாவுவதற்கு தயாராக இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனாற்தான் ரணில் எந்தக் கட்சி வேட்பாளராகவும் நிற்காது பொதுவேட்பாளராகவே போட்டியிடுவாரென்று அவரது கட்சியின் பிரமுகர்கள் அடிக்கடி சொல்லி வருகின்றனர். ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் ரணில், சிங்களத் தரப்பின் பொதுவேட்பாளராக போட்டியிடப் போகிறார் என்றே இதனைக் கூற வேண்டும்.
இந்தத் தளத்தில் நின்று தமிழர் தேச (தேசிய) அரசியல் போக்கையும், தமிழ் வேட்பாளர் முன்னெடுப்பையும் உள்நோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. சிங்கள தேசம் தங்களுக்கான ஆட்சித் தலைவரை பொதுவேட்பாளர் என்ற போர்வையில் நிறுத்தி ஆட்சியை வயப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென்று முதன்முறையாக எடுக்கப்படும் முயற்சிக்கு சில கறுப்பு ஆடுகள் முட்டுக்கட்டை போட்டு சிதறடிக்க முயல்கின்றன.
ஆனாலும், பொதுவேட்பாளர் என்ற முன்னெடுப்பு எதிர்பார்த்ததிலும் பார்க்க வேகமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழர் தரப்பில் அரசியல் தூரப்பார்வை கொண்ட முயற்சி அதன் இலக்கை நோக்கி நேர்த்தியாகச் செல்வது தெரிகிறது. வடமாகாண முன்னாள் அமைச்சரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி ஆரம்பத்திலிருந்தே முழுமையாக இதனை ஆதரித்து வருகிறது. தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, புதிய தலைவராகத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கொள்கை ரீதியாக இதனை ஆதரித்துள்ளனர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த மூத்த தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் தங்கள் ஆதரவை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோ, புளொட் ஆகிய இரண்டும் தங்கள் அமைப்பின் கூட்டத்தை நடத்தி பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (தமிழ் காங்கிரஸ்) வழமைபோன்று எந்தப் பக்க சார்புமின்றி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் நிலைப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்கிறது. இதனை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த துண்டுப் பிரசுர பரப்புரையையும் இது ஆரம்பித்துள்ளது.
ஆக, தமிழ்த் தேசியம் என்ற வட்டத்துக்குள் இருந்து கொண்டு இதனை எதிர்ப்பவர்களை ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம். தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் என்று அழைக்கப்படும் திருமலை எம்.பி.சம்பந்தன், அக்கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தேசியப் பட்டியலூடாக கட்சிக்குள் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை எதிர்த்து வருபவர்கள். இவர்களுக்குள் எதிர்ப்பை வெளியிட்ட முதலாவது ஆள் யாரென்ற ஒரு வகைப் போட்டியையும் காண முடிகிறது.
சில விடயங்களில் இவர்கள் மூவரும் நீண்டகாலமாக ஒத்த கருத்துள்ளவர்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற தமிழரசு கட்சி தலைவர் போட்டியில் சுமந்திரனின் வேட்பு மனுவில் முதல் ஒப்பமிட்டு ஆதரித்தவர் சீ.வி.கே.சிவஞானம். வருங்காலத்தில் இவ்வாறான எதனையும் தாம் செய்யப் போவதில்லையென அண்மையில் இவர் தெரிவித்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
சிங்களத் தலைவர்களுடன் பேரம் பேசித்தான் தமிழர் ஏதாவது பெற வேண்டும், தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிடுவதால் இனவாதம் தூண்டப்படும் என்றெல்லாம் வெவ்வேறான கருத்துகளை கூறிவரும் எதிர்ப்பாளர்கள், கடந்த 75 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கும், சாத்வீக போராட்டங்களுக்கும் என்ன நடைபெற்றது என்பதை மறந்துவிட்டனர்போல் தெரிகிறது.
ஆனால், தமிழர் சமூகத்தின் 83 பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் அண்மையில் கூடி கலந்துரையாடி தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தை முன்னெடுக்க தமிழர் பொதுச்சபைக்கு 25 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளனர்.
இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு விடுத்த ஆதரவு அறிக்கையில் பொதுவேட்பாளர் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற ஆரோக்கியமான ஆலோசனையை முன்வைத்துள்ளது.
இவ்வாறு பல முனைகளிலிருந்தும் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வலுவடைந்து வரும் வேளையில் தமிழரசுக் கட்சியின் மூவர் மட்டும் எதற்காக இதனை எதிர்க்கிறார்கள். வடக்கு கிழக்கில் எத்தனை சதவீதத்தை பொதுவேட்பாளரால் பெறமுடியுமென்றும் சிலர் கேள்வி கேட்கின்றனர். இலங்கையின் இனவீதாசாரத்தில் தமிழ் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக முடியாதென்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழரின் வாக்கைப் பெற்று, தமிழரைத் தொடர்ந்து ஏமாற்ற ஒரு சிங்களவர் முதற்சுற்றிலேயே ஐம்பது வீத வாக்குகளுடன் வெற்றி பெற வேண்டுமென்பதுதான் இதனை எதிர்ப்பவர்களின் நோக்கமா?
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளிவந்த பின்னர் அவர்களுடன் உரையாடிய பின்னரே யாரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்க முடியுமென கூறிவரும் சம்பந்தன், அதற்கு முன்னர் எதற்காக அவசரப்பட்டு தமிழ் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார் என்பது புரியவில்லை.
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த அனுமதித்தால், இனி வரப்போகும் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களிலும் வடக்கு கிழக்கில் தமிழ் பொதுவேட்பாளர்களையே நிறுத்த வேண்டுமென்ற குரல் ஓங்கும். இந்நிலைமை உருவாகுமானால் கட்சிகளுக்குள் ஒளித்திருந்து கதிரைகளைப் பெற ஆசை கொள்பவர்களின் எதிர்காலம் இருளடைந்துவிடும் என்பதால்தான் பொதுவேட்பாளரை இவர்கள் எதிர்க்கிறார்களா?
Post a Comment