எட்டு நாட்களின் பின்னர் வீடு வந்தனர்!
முள்ளிவாய்க்கால் கஞ்சிக்காக திருமலையில் கைதான நால்வரும் நினைவேந்தல் முடிவுற்ற பின்னராக சுமார் எட்டு நாட்களின் பின் இன்றே வீடு திரும்பியுள்ளனர்.திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த நால்வரே இன்று விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
கைதான பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (20) அழைத்து வரப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான கடந்த ஞாயிற்றுகிழமை (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதையடுத்து, இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை விடுதலை செய்வதற்கான நகர்த்தல் பத்திரம் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) நால்வரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணை முன்னெடுக்கப்பட்டமையால் அன்றைய தினம் சந்தேக நபர்களும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை. எனினும் அன்றைய தினம் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அவர்கள் இன்று எட்டு நாள் சிறை வாழ்க்கையின் பின்னராக மூதூர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment