வாயில் மட்டும் நல்லெண்ணம்:கோமகன் குற்றஞ்சாட்டு!



கொழும்பு விளக்கமறியல் சிறையில்  ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறதென குரலற்றவர்களின் குரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன்

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆணந்த வர்மனை நேற்றையதினம் சிறை வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தித்துள்ளோம்.

வவுனியாவை சேர்ந்த ஆனந்தவர்மன், கடந்த மார்ச் 26. அன்று பயங்கரவாத விசாரனைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.  அவர் தனது முகநூல் பக்கத்தினூடாக மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வகையில் பதிவுகளை இட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மறு அழைப்புத் திகதி எதுவுமின்றி காலவரையரையற்ற விளக்கமறியலில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் தன்னை, "உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.  

அவ்வாறில்லையேல், தன்மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கமைய மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்து மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பது நாட்களாக சிறைக்குள் இருந்தவாறு உணவுத் தவிர்ப்புப் பேராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். 

யுத்தத்தின்போது கடுமையான விழுப்புண்களுக்கு ஆளாக்கப்பட்ட ஆனந்தவர்மன், ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்றிருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. 

அதனடிப்படையில், நீண்டகாலமாக உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த இவர்,  தற்போது ஒன்பது நாட்களை கடந்தும் உறுதியோடு மேற்கொண்டு வருகின்ற உணவுத் தவிர்ப்பு காரணமாக உடல் உருக்குலைந்து மிகவும் சோர்வுற்ற நிலையில் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உதட்டளவில் மாத்திரமே நல்லிணக்கம் பேசுகின்ற அரசானது மிகநீண்ட காலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் திருட்டு மௌனம் காத்துவருவதாக கோமகன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

 


 

No comments