ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் புத்தர்!

 


திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர்சிலை  திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில், வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுவந்த புத்தர்சிலை கடந்த வெள்ளிதிறந்து வைக்கப்பட்டது. 

ஆப்பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டது. அவ்விடத்திலேயே தற்போது பாரிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளது.

சட்ட விரோத கட்டுமானம் தொடர்பாக திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து நகரசபையின் செயலாளர் அப்பகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கட்டுமானங்களை பார்வையிட்டிருந்தார். கட்டுமானப்பணிகளுக்காக நகராட்சி மன்றம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட எவ்வித அனுமதிகளும் பெறப்படாத நிலையிலேயே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான 2 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகள் 200க்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட விரோதமான முறையில் புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற செயற்பாடுகள் இன நல்லிணக்கத்தை பாதிக்கும் எனவும் தமிழ் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

பௌத்த மயமாக்கலின் மூலம் தமிழர் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுடைய காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், சிறிய புத்தர் சிலை வைப்பதில் தொடங்கி அது விகாரையாக மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் வரையிலான செயற்பாட்டை அரசு முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 


No comments