சொந்த செலவில் ஆப்பு!

இலங்கையில் நடந்த போரின் போது பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி நவாஸ் ஆணைக்குழு, இசைப்பிரியா தளபதி ரமேஸ் மற்றும் பாலச்சந்திரன் பிரபாகரன் ஆகிய மூவரினதும் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளது.

அக்கோரிக்கைகள் நீண்ட காலமாக மனித உரிமை இயக்கங்களால் முன்வைக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கை செயற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினியான இருபத்தேழு வயதான இசைப்பிரியா, சிங்களப் படையினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அதே போன்று தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பதுங்கு குழியில் அமர்ந்து பிஸ்கட் சாப்பிட்டவாறாக இருந்த நிலையில் பின்னர் கொல்லப்பட்டது போன்ற புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

அதே போன்று கைது செய்யப்பட்ட தளபதி கேணல் ரமேஸின் புகைப்படமும் வெளியாகியிருந்த நிலையில் பின்னர் அவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட புகைப்படங்களும் பகிரங்கமாகியிருந்தன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கோட்டாபாய ராஜபக்ச வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் நவாஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இறுதி போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவும் இலங்கை அரசு நியமித்த அனைத்து ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளையும் பரிசீலிக்கவே புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் (உச்ச நீதிமன்ற நீதிபதி) மற்றும் சமூக உறுப்பினர்களான சந்திரா பெர்னாண்டோ (முன்னாள் பொலிஸ் மா அதிபர்), நிமல் அபேசிறி (ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர்) மற்றும் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். அந்த மக்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்சவினால் அவரது விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யப்பட்டவர்கள். 

எனினும் வெள்ளைக் கொடி ஏந்திய விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நவாஸ் குழு வலுயுறுத்தியுள்ளது.


No comments