பருத்தித்துறையில் இந்திய மீனவர் உடலம்?
பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கரை ஒதுங்கிய உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஒருவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதேவேளை தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் (23) அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23-ம் திகதி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு ஃ மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment