தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே நீச்சல் - நடுகடலில் உயிரிழந்த முதியவர்


தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சென்ற நீச்சல் வீரர் நடுக்கடலில் திடீரென உயிரிழந்துள்ளார். 

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 பேர் கொண்ட குழுவொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை நீந்தி சென்றுள்ளது. அதன் போது , 13 பேரில் ஒருவர் உடல்நல குறைப்பாடு ஏற்பட்டு , கடலில் உயிரிழந்துள்ளார். 

கர்நாடாக மாநிலம் பெங்களுர் மாவட்டம் பகுதியை சேர்ந்த 78 வயதான கோபால்ராவ் என்பவரே உயிரிழந்துள்ளார். 

நீச்சல் வீரர்கள் 13 பேரை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட குழுவினர் இராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை  படகில் தலை மன்னாரை வந்தடைந்தனர். 

தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.10 மணிக்கு 13 பேர் நீந்த தொடங்கிய நிலையில். சுமார் அதிகாலை 02. 10 மணியளவில் நீச்சல் வீரர்களில் ஒருவரான கோபால் ராவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

படகில் இருந்த மருத்துவ குழுவினர் அவரை மீட்டு பரிசோதனை செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார் என தெரிய வந்தது.

அதனை அடுத்து, உடல் தனுஷ்கோடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்த இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சம்பவம் தொடர்பில்  கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments