பொதுவேட்பாளர் பெறும் வாக்குகள் தமிழர் நாடும் அரசியல் தீர்வை சர்வதேசத்துக்கு புலப்படுத்தும்! பனங்காட்டான்


சிங்கள தேசம் கட்சிகள் ரீதியாக பிளவுபட்டுள்ள இன்றைய அரசியல் காலநிலை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதற்கு மிகச் சாதகமானது. ஒற்றைக் கோரிக்கையில் ஒன்றுபட்டு இந்தப் போட்டி அமையுமாயின், 1982 ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் தனித்து நின்று பெற்றதைவிட கூடுதலான வாக்குகளை பெறமுடியும். இது தமிழர் விரும்பும் அரசியல் தீர்வை சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும்.

மாகாண சபைகளுக்குக் காணி அதிகாரம் இருக்குமென்று கூறிய ரணிலின் ஆட்சியில், தமிழ் மக்கள் தங்கள் மண்ணிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூட முடியாத நிலை அதிகரித்து வருகின்றது. 

மதவெறி பிடித்த சிங்கள தொல்பொருள் திணைக்களமும் அவர்களுக்குத் தோள் கொடுத்து அலையும் காவல்துறையும் சிவராத்திரி நாளன்று வெடுக்குநாறி மலையில் நடத்திய எதேச்சாதிகாரத்தை எதுவும் தெரியாததுபோல பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது சிங்கள ஆட்சிபீடம். 

பௌத்த வழிபாட்டுத் தலமொன்றில் அரசமர இலையொன்றைக் கிள்ளினாலே பயங்கரவாதமாகப் பார்க்கும் ஆட்சித்தரப்பு, வெடுக்குநாறிமலையில் அரச இயந்த்pரம் மேற்கொள்ளும் அராஜகத்தை கண்மூடியவாறு அனுசரித்துச் செல்கிறது. தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதனை சுட்டிக்காட்டுகின்றன. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எதுவுமே இடம்பெறாதது போன்று மௌனம் காத்து ஆட்சிபீடத்தைக் காத்து வருகின்றன. 

தமிழராகப் பிறந்தவர்கள் நாளாந்தம் எல்லாவற்றுக்குமே போராடிக் கொண்டிருக்க வேண்டுமென்பது வாழ்க்கையாகி விட்டது. வேலன் சுவாமிகள் வீதியில் இறங்கி மக்களோடு மக்களாக நின்று - தேவைப்படும்போது அவர்களுக்குத் தலைமை தாங்கி நியாயம் கோரும் பேரணிகளில் காணப்படுகிறார். 

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தலைவர், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் நியாயமான, செயற்படுத்தக்கூடிய ஒரு கோரிக்கையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்துள்ளார். வெடுக்கநாறி ஆலய பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கும்வரை இவர்கள் நாடாளுமன்றம் செல்வதில் அர்த்தமில்லை என்ற கோரிக்கையானது, நாடாளுமன்ற அமர்வுகளை இவர்கள் பகி~;கரிக்க வேண்டும் என்ற அர்த்தமுள்ளது. 

நாடாளுமன்றத்தில் தனித்தனியாக இவர்கள் உரையாற்றுவதை விடுத்து, அனைவரும் இணைந்து சரியான முடிவை பெற்றுத்தர வேண்டுமென இவர் கேட்டுள்ளார். 

அரசாங்கத்தின் சகல அடக்குமுறைகளுக்கும் எதிராக நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பது பற்றி ஆராய வருமாறு தமிழ் தேசிய கட்சி எம்.பிக்களை சி.வி.விக்னேஸ்வரன் அழைத்துள்ளார். நாடாளுமன்ற பகி~;கரிப்பு அழைப்பை முதலில் விடுத்தவர் அகத்தியர் அடிகளார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 

வெடுக்குநாறிமலை அராஜகத்தைத் தடுக்க என்ன செய்யலாம் அல்லது என்ன செய்ய வேண்டுமென்றவாறு நீதி கேட்கும் குரல்கள் பல திசைகளிலிருந்தும் வருகின்றபோதிலும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் அல்லது அவர்களின் கட்சிகளிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் வரவில்லை. 

ஆலய விவகாரத்தில் கைதாகி காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவதோடு எல்லாமே காற்றோடு காற்றாகிப் போனால் ஆச்சரியப்பட வேண்டி வராது. சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி துறந்து நாட்டைவிட்டு ஓடியபோது ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் எவ்வாறு பிசுபிசுத்து முடிந்தது என்பது ஞாபகமிருக்கிறது. 

தமிழர் பிரச்சனைகளில் ஆலய வழிபாடுகள் புதிய பிரச்சனையாகத் தொடரும் அதேவேளையில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் புதுப்புது பிரச்சனைகளுடன் தலைதூக்குகிறது. 

அரசியல் யாப்புக்கு இணங்க, வருகின்ற அக்டோபர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வேண்டும். தேர்தல் நிச்சயம் நடைபெறுமென்று ரணில் விக்கிரமசிங்க பல தடவை கூறிவிட்டார். தாம் போட்டியிடப் போவதாகவும் ஒருவாறு அறிவித்துவிட்டார். கடந்த வாரம் குளியாப்பிட்டியில் இதற்கான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தையும் அவர் ஆரம்பித்தார். ஆனாலும் ஏனோ பலருக்கும் தேர்தல் நடைபெறுமென்பதில் நம்பிக்கை ஏற்படவில்லை. 

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராக நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்குச் செல்ல ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன நாட்டம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ரணில் திட்டமிடுவதாக பரபரப்புச் செய்திகள் வருகின்றன. 

இன்னொரு புறத்தில், இரண்டு தேர்தல்களையும் ஒத்தி வைக்க ரணில் திரைமறைவில் முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு தங்களின் பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என்று அண்மையில் நாடு திரும்பிய பொதுஜன பெரமுன அமைப்பாளர் பசில் ராஜபக்ச தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். 

பெரமுனவில் கணிசமானோர் - முக்கியமாக அமைச்சர்களாகவும் ராஜாங்க அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் ஆதரவை ரணிலுக்கு வழங்குவதற்கு தயாராகியுள்ளனர். சிலர் பகிரங்கமாகவும் இதனை வெளிப்படுத்தியுமுள்ளனர். சஜித் பிரேமதாசவின் கட்சியைச் சார்ந்த ஒரு அணியினர்கூட ரணிலுடன் சேர்வதற்கு தயாராக இருப்பதாக அவருடன் நெருக்கமானவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். இதனைவிட சில சொரியல்களும் தாராளமாக உண்டு. 

பொதுஜன பெரமுன தனது ஆதரவை ரணிலிடமிருந்து மீளப்பெற்றாலும், வெவ்வேறு தரப்புகளிலிருந்து கிடைக்கும் ஆதரவுத் துணிச்சலுடன் ரணில் ஜனாதிபதி தேர்தலை சந்திப்பாரென்பது அவரைச் சுற்றியுள்ள ஹரின் பெர்ணான்டோ, மனு~  நாணயக்கார, வஜிர அபேவர்த்தன, சாகர காரியவாசம் போன்றோரின் கணிப்பு. 

இது விடயத்தில் இரண்டு கருத்துகளை ஆழமாக நோக்க வேண்டும். சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், நாட்டின் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைமை அங்கில்லையென்று சஜித்தை மட்டம்தட்டிக் கூறியுள்ளார் பசில் ராஜபக்ச. 

இத்துடன் நிறுத்தாது, இன்றைய நெருக்கடியைத் தீர்க்க பொதுஜன பெரமுனவும் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியும் சஜித்தின் மக்கள் தேசிய கட்சியும் ஓரணியாக இணைய வேண்டுமென்ற தமது விருப்பத்தையும் பசில் பகிரங்கப்படுத்தியுள்ளார். 

இதனூடாக அவருக்கிருக்கும் இரண்டு அச்சங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது - தேசிய மக்கள் சக்தியென பெயர் கொண்டுள்ள ஜே.வி.பி.யின் அனுர குமார திசநாயக்கவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமானால் மற்றைய மூன்று கட்சிகளும் இணைந்தாக வேண்டுமென்பது. இரண்டாவது - சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து தேர்தலைச் சந்தித்தால் பொதுஜன பெரமுனவின் எதிர்காலம் சூனியமாகிவிடுமென்பது. இந்தப் பின்னணியிலேயே மூன்று கட்சிகளின் இணைப்பு  வேண்டுமென அவர் விரும்புகிறார். 

இவ்வாறான இணைப்பொன்று ஏற்படுமானால், தற்போது பெரமுனவுக்குள் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் இல்லாத நிலையில் ரணிலை வேட்பாளராக்கி வெற்றி பெறச்செய்து, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் கட்சியை நிலைநிறுத்திக் கொள்ளலாமென்ற கபடத்தனம் பசிலிடம் மறைந்திருக்கிறது. 

ஆனால், ரணில் இதனை வேறுவிதமாக நோக்கினால் - அதாவது சஜித் அணியை தம்முடன் இணைத்துக் கொண்டு, தம்மோடு இணையக் காத்திருக்கும் பெரமுனக்காரர்களையும் சேர்த்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், தம்மை ஓரங்கட்ட நினைக்கும் பசில் தரப்பை - அவரின் பெரமுனவை அறகலய கால முடிவுக்குக் கொண்டு வரலாம் எனும் குள்ளநரி மூளை வெற்றி பெறலாம். 

இப்போதுள்ள கேள்வி தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது. ஷமக்கள் மனு| - சிவில் சமூகம் ஏற்பாடு செய்த கருத்துப் பகிர்வு அண்மையில் டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஜனாதிபதித் தேர்தலின் தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றி பலரும் கருத்துத் தெரிவித்தனர். 

முன்னொரு காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை பகி~;கரித்த தமிழர்கள், பின்னர் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களை இலக்கு வைத்து மற்றைய போட்டியாளர்களுக்கு வாக்களித்து வந்தனர். ஆனாலும், வெற்றி பெற்றவர்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கை எதனையுமே ஒருபோதும் நிறைவேற்றவில்லை. தமிழினம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வருகிறது. 

அதேவழியைத்தான் இனியும் பின்பற்றப் போகிறார்களா என்ற கேள்வி இந்தக் கருத்துப் பகிர்வில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமக்குள் வெவ்வேறு விடயங்களில் பிரிந்து நின்றாலும், சம~;டிக் கோரிக்கையை அவர்கள் ஒரு குரலில் கேட்பதை அண்மைக் காலங்களில் காண முடிகிறது. இந்தக் கோரிக்கையை பெறுவதற்கான தமிழ் மக்களின் சர்வஜன வாக்கெடுப்பாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இப்போது காணப்படுகிறது. 

1982 ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழர் தாயக வாக்களிப்பில் நல்லதொரு பாடம் கற்பித்தது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொதுவேட்பாளராக நியமித்து, அவர் பெறும் வாக்குகள் ஊடாக தமிழர் விரும்பும் நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகத்துக்குப் புலப்படுத்த முடியும். இச்சந்தர்ப்பத்தில்கூட தமிழ் தேசிய கட்சிகளால் ஒன்றுபட முடியவில்லையெனில், பின்னர் எப்போது சாத்தியமாகும்? 


No comments