ஹைட்டியில் சிறையுடைப்பு: 3,700 கைதிகள் தப்பித்தனர்


ஹைட்டி போர்ட்-ஓ-பிரின்ஸ் சிறைக்குள் ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஹைட்டி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை 72 மணி நேர அவசர நிலையை அறிவித்தது. 

சிறையுடைப்புத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 3,700 கைதிகள் தப்பினர்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றியை பதவி விலகச் செய்ய வற்புறுத்த வேண்டும் என்று கும்பல் தலைவர்கள் கூறுகின்றனர். அவரை வெளியேற்றும் நோக்கில் குழுக்கள் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன.

குழு வன்முறை பல ஆண்டுகளாக ஹைட்டியை பாதித்து வருகிறது.

அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக சிறைச்சாலைகள் மீதான தாக்குதலுக்கு முன்னர் காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன.

போர்ட்-ஓ-பிரின்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட கும்பல் உறுப்பினர்களும் அடங்குவர்.

கென்யா தலைமையிலான பன்னாட்டுப் பாதுகாப்புப் படையை ஹைட்டிக்கு அனுப்புவது குறித்து விவாதிக்க பிரதமர் நைரோபிக்கு கடந்த வியாழக்கிழமை சென்றபோது சமீபத்திய வன்முறைத் தாக்குதல்கள் தொடங்கியன.

பார்பெக்கீ என்ற பெயரில் இயங்கும் ஒரு குழுவின் தலைவனான ஜிம்மி செரிசியர் பிரதமரை அகற்ற ஒரு ஒருங்கிணந்த தாக்குதலை அறிவித்தார்.

நாங்கள் அனைவரும், மாகாண நகரங்களில் உள்ள ஆயுதக் குழுக்களும் தலைநகரில் உள்ள ஆயுதக் குழுக்களும் ஒன்றுபட்டுள்ளோம் என்று போர்ட்-ஓ-பிரின்ஸில் நடந்த பல படுகொலைகளுக்குப் பின்னால் இருந்ததாகக் கருதப்படும் முன்னாள் காவல்துறை அதிகாரி கூறினார்.

தலைநகரின் பிரதான சிறைச்சாலையை வலுப்படுத்த உதவுமாறு ஹெய்ட்டியின் காவல்துறை சங்கம் இராணுவத்திடம் கேட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments