டக்ளஸின் கடல்காவலர்கள் யார்?



வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்துள்ளார்.

எனினும் அத்தகைய முயற்சி தமிழக உறவுகளுடனான மோதல்களிற்கே வழிகோலுமென உள்ளுர் மீனவ அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

வடமாகாண கடற்றொழிலாளர்களின் வலைகளை அழிப்பதற்காக இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதைத் தடுப்பதற்கான கடற்படையின் தற்போதைய முயற்சியை கண்காணித்து உதவுவதற்காகவே கடல் காவலர்கள் திட்டம் கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் ஊடாக தன்னார்வப் படையில் ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் தம்மீது இலங்கை கடற்படை தாக்குதல்களை நடாத்திவருவதான இந்திய மீனவர்களது குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவே இத்தகைய குண்டர்படை உருவாக்கப்படுகின்றதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனிடையே கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரபூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன் என தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.


No comments