ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல்: 8 பேர் பலி!


ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்  இன்று திங்கட்கிழமை  தெரிவித்தார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (2230 GMT) பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீதே பாகிஸ்தான் விமானம் மூலம் தாக்குதலை நடத்தியது. 

இத்தாக்குதலின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் என எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகமும் தாக்குதல்களை உறுதி செய்துள்ளது. 

ஆப்கானிஸ்தானுக்குள் இருக்கும் பாகிஸ்தான் தலிபான்கள் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் தலிபான் ஒரு தனி போராளிக் குழுவாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், அத்தகைய ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறுவது அதன் அண்டை நாடுகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மோசமான விளைவுகளை கொண்டு வரும் என்று தலிபான் பேச்சாளர் எச்சரித்தார்.

வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று திங்கட்கிழமை பிற்பகுதியில் கனரக ஆயுதங்களுடன் எல்லையில் பாகிஸ்தான் துருப்புக்களை குறிவைத்ததாகக் தலிபான்கள் கூறியது.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்ததாகவும், வடமேற்கு குர்ரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமவாசிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

No comments