புல்லரிப்பு:ஆமி பாதுகாப்பில் வழிபட அனுமதியாம்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 7 ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரின் அனுமதியுடன் பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது கையடக்கத் தொலைபேசிகள், கமராக்கள், வீடியோ கருவிகள் எவையும் அனுமதிக்கப்படவில்லை.
கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயம், மானப்பிராய் பிள்ளையார், சிவன் ஆலயம், நாகர் ஆலயம் , சக்தியுடையாள் அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கு மக்கள் சென்றதுடன். பலாலி வடக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயம், பலாலி வடக்கு நாகதம்பரான் ஆலயத்துக்கு செல்வதற்கான பெயர்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுவன் ஆறுமுகக் குருக்கள் உட்பட 36 பேர் சென்றனர். 1990 ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையால் மக்கள் இடம்பெயர்ந்தததையடுத்து உயர் பாதுகாப்பு வலயமாகியதால் ஆலயம் பாவனையற்று கட்டங்கள் , மற்றும் கூரைகள் சேதமடைந்து காணப்படுவதுடன் ஆலய வாகனங்களும் காணமுடியவில்லை. ஆலயத்தை சூழ இப்பிலிப்பிலி பற்றைகளாக உள்ளது.
மேலும் ஆலயம் சேதமடைந்துள்ளபோதும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள இராணுவத்தினரால் பிள்ளையார் சந்நிதானத்தில் பிள்ளையாருடன் அங்குள்ள வைரவர், அம்மன், நாகதம்பிரான் விக்கிரகங்களுக்கு மாலையிட்டு இராணுவத்தினர் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பிள்ளையார் சந்நிதானத்திலும் ஆலய நந்தி பீடப்பகுதியிலும் குருக்களால் இன்று பூசைகள் இடம்பெற்றுதுடன் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தினை விடுவிக்குமாறு குருக்களும் அங்கு சென்ற மக்களும் இராணுவத்தரப்பினருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதேவேளை விரைவில் வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து ஒருதொகுதி நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது இதில் குறித்த ஆலயம் விடுவிக்கப்படுமா என்ற ஏக்கத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் உள்ளனர்.
Post a Comment