மன்னாரில் போராட்டம்!



தனிப்பட்ட பகை மோதல்களின் போது துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யும் சம்பவங்கள் மன்னாரில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து இன்று காலை துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அந்நபர் தப்பித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை(19) நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒரு ரி-56 ரக துப்பாக்கி மூலம் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர் .எனினும் குறிப்பிட்ட விவசாயி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற துப்பாக்கி சூடுகளையடுத்து கிராமத்துக்கு காவல்துறையினரின் காவல் போடப்பட்டும் அதையும் மீறி துப்பாக்கி  பிரயோகம் நடந்துள்ளது.

இதனிடையே இன்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் பதாதைகளுடன் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும், காவல்துறையினரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


No comments