நால்வர் கைது!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு; அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த நால்வரே இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு முழுமையாக காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்.
இந்நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினை சேர்ந்த சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவர்களை பழைய பூங்காவையண்டிய வீதிக்கு முடக்கிய காவல்துறையினர் பேருந்து ஒன்றினை முன்னிறுத்தி எதிர்ப்பினை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பார்வையிடாதவாறு மறைத்திருந்தனர்.
எனினும் ஜனாதிபதி மாவட்ட செயலகத்தை வந்தடைந்த பின்னர் போராட்டகாரர்கள் வெளியேறியிருந்தனர்.

Post a Comment