மகிந்த வேண்டாம்:ரணிலுக்கு டெலோ பச்சைக்கொடி!



ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தமிழீழ விடுதலை இயக்கம் தயாராகியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்சஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லையென அமைச்சர்கள் பலரும் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

ஆயுதப்போராட்டம் 2009 இல் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதி மகிந்த. புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஓர் உத்தரவாத்தத்தைக் கொடுத்து  எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார்.

2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதி நிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மஹிந்த  ராஜபக்சஷ, தமிழ் மக்களுடன் மீண்டும் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் என கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ  அவருடன் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை.

யாராக இருந்தாலும் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை” என  கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.


No comments