அமைச்சரே சொன்னார்:மோசமானது இலங்கை காவல்துறை!
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரச அமைச்சர் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளமை ஜனாதிபதியின் யாழ்.வருகை மத்தியில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
நாளைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல இரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
அப்போது போதைப் பொருள் பாவனைக்கு எதிராக யாழ் மாவட்டத்தில் காவல்துறையினர்; மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அதிருப்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்வதற்கான காலஅவகாசத்தினை காவல்துறை வழங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Post a Comment