சந்தேகத்தை நீட்சிப்படுத்தும் இரண்டாம் உலகத் தமிழர் பேரவை - பனங்காட்டான்
நீங்கள் எல்லோரும் இங்கு வந்துள்ளீர்கள். உங்களை யாரென்று எங்களுக்குத் தெரியாது என்று ஆறு. திருமுருகன் கொடுத்த நெற்றியடி காலத்தின் அனுபவம்.
இமயமலைப் பிரகடனத்துடன் ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்பில்லையென்று சுமந்திரனுக்கு எவ்வாறு தெரியும்?
பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் அடிக்கடி கைத்தொலைபேசியில் 'சுமோ, சுமோ" என விளித்து உரையாடியது யாருடன்?
இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ இல்லையோ, எப்போதும் ஏதாவது ஒரு புது விடயம் பேசுபொருளாகி, ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகி, சம்பந்தப்பட்டவர்களின் படங்கள் அங்குமிங்கும் பப்ளிசிட்டியாகி, பின்னர் எல்லாமே காணாமற்போய்விடுவது பழக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பட்டியலில் இப்போது காட்சி கொடுத்திருப்பது உலகத்தமிழர் பேரவை என்ற பெயரில் ஓர் அணி. இதனை ஓர் அமைப்பு என்றோ, மக்களால் தெரிவான குழு என்றோ சொல்ல முடியாது. பொழுதுபோக்குக்காக சிலர் கூட்டுச் சேர்ந்து ஒரு பயணத்தை தாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக மேற்கொண்டுள்ளனர் என்றே சொல்லலாம்போலத் தோன்றுகிறது.
அதிலும் ஒரு வில்லங்கம் இருக்கிறது. ஒறிஜினல் உலகத் தமிழர் பேரவை என்பது 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர் நாடுகளிலுள்ள பல தமிழர் அமைப்புகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு.
அப்போது ஐரோப்பாவிலிருந்து செயற்பட்ட வண.பிதா இமானுவல் அடிகளார் எடுத்த முயற்சியின் பலனாக உருவான இந்தக் கூட்டமைப்புக்கு அவரே தலைமையும் தாங்கினார். அப்போது பிரித்தானிய தமிழர் பேரவையில் ஒருவராகவிருந்த சுரேன் சுரேந்திரன் என்பவர் இதன் பேச்சாளராக விளங்கினார்.
உலகத்தமிழர் பேரவை ஒருபுறம், நாடு கடந்த அரசாங்கம் இன்னொரு புறமென நொந்து போயிருந்த தாயகத் தமிழருக்காக பல காரியங்கள் ஒப்பேறப் போகின்றன என்று பலரும் நம்பியிருந்தனர். வண.பிதா இமானுவல் அடிகளார் ஓய்வு பெற்றதோடு உலகத் தமிழர் பேரவையும் மூடப்பட்டது. இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் அவ்வப்போது தலைகாட்டினராயினும் பின்னர் சமூகத்தின் பார்வையிலிருந்து விலகிப் போயினர். இந்தப் பின்னணியில் பார்க்கின் இப்போது வலம் வருகின்ற கூட்டத்தினரை, இரண்டாவது உலகத் தமிழர் பேரவை என்றே குறிப்பிட வேண்டும். அதுவே சரியும்கூட.
அதுமட்டுமன்றி இக்கூட்டத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து புதிய பேரவைக்கென மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல. அல்லது அதிகாரபூர்வமாக அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் அல்ல. இவர்களை உதிரிகள் அல்லது சுயேட்சைகள் (சுய இச்சைகள்) என்றே சொல்ல வேண்டும்.
உதாரணத்துக்குக் குறிப்பிடுவதானால் இக்குழுவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவும் மகனும் (சுரேன் சுரேந்திரனும் அவரது மகனும்) உள்ளனர். கணவனும் மனைவியுமாக ஒரு தம்பதியினர் இடம்பெற்றுள்ளனர். வட அமெரிக்காவிலுள்ள அமைப்பொன்றின் முன்னாள் தலைவரும் உள்ளார். இப்படித்தான் இரண்டாவது உலகத் தமிழர் பேரவை பிறப்பெடுத்து தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு கிளம்பியுள்ளது. உலகளாவிய ரீதியில் கட்டமைப்புகளாக இயங்கும் தமிழர்களின் நேர்த்தியான அமைப்புகளை அவமதிக்கும் செயலாகவே இவர்களின் நடவடிக்கையை பலரும் பார்க்கின்றனர்.
இந்த இரண்டாம் உலகத் தமிழர் பேரவை இலங்கையிலுள்ள சில பௌத்த துறவிகளைப் பொறுக்கியெடுத்து - எந்த அடிப்படையில் என்று குறிப்பிட முடியாதவாறு, அவர்களின் கூட்டுக்கு ஷசிறந்த இலங்கையருக்கான சங்க மன்றம்| என்று பெயர் சூட்டி, அவர்களையும் தங்களுக்குக் காவலர்களாக அணைத்துக் கொண்டு திரிகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தாயக உறவுகளின் வாழ்வுரிமைக்காகவும் போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை வேண்டியும் ஜனநாயக ரீதியாக இயங்கி வருகின்றனர். முக்கியமாக, மக்களால் தெரிவான மக்கள் அவைகளைக் கூட்டிணைத்து ஒரே நேர்கோட்டில் தொழிற்பட்டு வருகின்றனர்.
இரண்டாவது உலகத் தமிழர் பேரவையின் தலைவரென அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சுரேந்திரனை எப்போது எங்கே இப்பதவிக்கு யார் தெரிவு செய்தனர் என்பது எவருக்கும் தெரியாது. பிரித்தானியாவில் வசிக்கும் இவருக்கு உலகளாவிய தமிழ் தேசிய சபை 2010 ஜனவரியில் அங்கு நடத்திய சுதந்திர இறைமையுள்ள தமிழ் ஈழத்துக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 99.3 வீதமானவர்கள் ஆதரவாக வாக்களித்தது தெரியாதிருக்க முடியாது.
இதே கருத்துக்கணிப்பு இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி, கனடா, பிரான்ஸ், நோர்வே, ஆஸ்திரேலிய நாடுகளிலும் சமகாலத்தில் நடத்தப்பட்டது. சகல நாடுகளிலும் 99 வீதத்துக்கும் கூடுதலானவர்கள் சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்தை வேண்டி வாக்களித்ததையும் சுரேன் சுரேந்திரன் மறந்திருக்க முடியாது.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்திய திம்புக் கோட்பாடும், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் பிரகடனம் செய்யப்பட்ட வரலாற்றை இலகுவாக தமிழின விரோதிகளாலும் மறக்க முடியாது.
இவைகளுக்கப்பால் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலரால் சொல்லப்பட்டு வந்த ஒருங்கிணைந்த - பிளவுபடாத இலங்கைக்குள் ஒரு தீர்வைக் காண்பதற்கு அதற்கென ஆறு அம்சத்தை உள்ளடக்கிய ஒரு வரைபைத் தயாரித்து அதற்கு ஷஇமயமலைப் பிரகடனம்| என்று பெயர் சூட்டியிருப்பது, இதுவரை ஈழத்தமிழர் நடத்திய அத்தனை விடுதலைப் போராட்டங்களையும் மலினப்படுத்தியுள்ளது.
இந்தப் பேரவையினர் சிறந்த இலங்கையின் சங்கம் என்ற பௌத்த துறவிகளையும் இணைத்துக் கொண்டு கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல சந்திப்புகளை இதுவரை நடத்தியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன், ராவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் ஜே.வி.பி.தலைவர்கள் உட்பட பலரை சந்தித்து இமயமலைப் பிரகடன பிரதிகளை வழங்கியுள்ளனர். அனைவரும் அதனைப் பெற்றுள்ளனர். சிலர் ஆசிர்வதித்துள்ளனர். சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். இவர்களுள் இருவர் வழங்கிய ஆலோசனைகள் கூர்மையான அவதானிப்புக்குரியவை.
உலகத் தமிழர் பேரவை என்ற பெயரை இலங்கையர் பேரவை என்று மாற்ற வேண்டுமென சஜித் பிரேமதாச ஆலோசனை கூறியுள்ளாராம். அதாவது தமிழர் என்ற பெயரே தமிழர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புக்கு இருக்கக்கூடாது என்பதில் எதிர்கால ஜனாதிபதியாக வர விரும்பும் சஜித் பிரேமதாச அக்கறையாக உள்ளார்.
சிங்கள பௌத்த நாடு என்ற சிந்தனையும், தமிழருக்கு மட்டுமே தனித்தமிழ் நாடு என்ற சிந்தனையும் மாற வேண்டுமென்று மனோ கணேசன் பௌத்த துறவிகள் முன்னால் பேரவையினருக்கு தம்ம போதனை வழங்கியுள்ளார். இவரது கூற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்பது சரியாகப் புரியவில்லை.
மற்றொரு முக்கியமான கருத்தை மகாநாயக்கர்களும், கத்தோலிக்க பேராயர் மல்கம் றஞ்சித்தும் தெரிவித்ததாக சுரேன் சுரேந்திரன் கூறி வருகிறார். நெருக்கடியான காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பி;ரபாகரனை சந்திப்பதற்கு பல தடவை தாம் கேட்டதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லையெனவும் மகாநாயக்கர்கள் தெரிவித்தனராம்.
அதுபோன்று பேராயர் மல்கம் றஞ்சித்தும் விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க விரும்பியதாகவும், மன்னார் ஆயராகவிருந்த ராயப்பு யோசப் ஆண்;;டகையுடன் இதுபற்றிப் பேசியதாகவும், அந்த விருப்பம் கைகூடவில்லையெனவும் அவர் தெரிவித்திருந்தாராம்.
மகாநாயக்கர்களும் பேராயரும் காலம் கடந்து தெரிவிக்கும் இந்த விடயங்களின் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. உண்மையிலேயே இவர்கள் அந்த எண்ணம் கொண்டவர்களாக இருந்திருப்பின் ஏதாவது ஒரு வகையில் அப்போது தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்க முடியும். மாறாக யுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்கியவர்கள் இவர்கள்.
நவாலி தேவாலயத்தில் குண்டு வீச்சின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காக, குழந்தைகளுக்காக மனமிரங்கி ஒரு வார்த்தைகூட அனுதாபம் தெரிவிக்காத பேராயர் விடுதலைப் புலிகளின் தலைமையை சந்திக்க விரும்பினார் என்றால் யார் நம்புவார்? யுத்தமுனைக்குச் சென்ற படைத்துறை தலைமைகளுக்கு நூல் கட்டி ஆசி வழங்கிய மகாநாயக்கர்கள் இப்போது விரும்பினால் எதனையும் கூறலாம்.
ஆனால், இவர்கள் கூறுவதை தாயகத் தமிழர்கள் நம்ப வேண்டுமென்பற்காக அவர்களிடம் இலகுவாக விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர் இரண்டாம் உலகத் தமிழர் பேரவையினர். இந்தப் புருடாக்களை நம்புவதற்கு தமிழர்கள் இனியும் தயாரில்லை என்பதை தெரியப்படுத்தும் வகையில் நெற்றிக்கு நேராக எடுத்துக் கூறியுள்ளார் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன். நல்லை ஆதீனத்தில் இவர்களுடன் நடந்த சந்திப்பில் அவர் எடுத்துக் கூறியது இதுதான்:
'இன்று நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. உங்களைப் போல் பலர் இங்கே வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் எந்தத் தீர்வோ எந்த முடிவோ எட்டப்படவில்லை" என்ற ஆறு. திருமுருகனின் நெற்றிக்கு நேரான கருத்துக்கு அங்கு போனவர்களிடம் எந்தப் பதிலுமில்லை.
ஆனால், இவர்கள் யார், ஏன் உருவாக்கப்பட்டார்கள், எவருடைய ஆலோசனையில் இயங்குகிறார்கள் என்பது ஓரளவுக்கு தெரிய வந்துள்ளது.
சுரேன் சுரேந்திரன் அவரது குழுவின் ஒவ்வொரு விடயத்தையும் கைத்தொலைபேசி வழியாக உடனுக்குடன் ஒருவருக்கு தெரிவித்து வருவதாகவும், அவரை 'சுமோ, சுமோ" என்று விளித்து உரையாடியதாகவும் அக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் கூறி வருகின்றனர். யார் அந்த சுமோ?
அதேவேளை, இமயமலைப் பிரகடனத்துக்கும் தமக்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாதென தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருப்பது, எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்பதையே நினைவுபடுத்துகிறது.
ஒரு சந்தேகம் - தனக்குச் சம்பந்தமில்லையென்று சுமந்திரன் சொல்லலாம். ஆனால், ரணிலுக்குச் சம்பந்தமில்லையென்று எவ்வாறு கூற முடியும்? மலிந்தால் எல்லாம் சந்திக்கு வரும்.
Post a Comment