ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கொலராடோ மாநிலத்தில் டிரம்புக்குத் தடை!!


2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும்  2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க கேபிடல் கலவரம் தொடர்பாக கிளர்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதன் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும்  நீதிமன்றம் நேற்று செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பு கொலராடோவுக்கு மட்டுமே பொருந்தும். நியூ ஹாம்ப்ஷயர், மினசோட்டா மற்றும் மிச்சிகன் ஆகிய இடங்களில் டிரம்பை வாக்குப்பதிவில் இருந்து வெளியேற்றும் இதேபோன்ற முயற்சிகள் தோல்வியடைந்தன. இத்தீர்ப்பு அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களில் டிரம்ப் போட்டியிடுவதைத் தடுக்காது. 

எனினும் டிரம்பின் சட்டவல்லுநர்கள் இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளாார்கள். இந்த முடிவு முற்றிலும் தவறானது என்று அவர்கள் கூறினர்.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குடியரசுக் கட்சி வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை ஜனாதிபதிக்கு தேர்ந்தெடுக்கும் மார்ச் 5 ஆம் திகதி மாநிலத்தின் முதன்மைத் தேர்தல் பற்றி மட்டுமே தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நவம்பர் மாதம் கொலராடோவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இது பாதிக்கலாம்.


No comments