தொடரும் மழை:வெள்ள அபாயம் கடுமை!



வடமாகாணத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக அனைத்து குளங்களும் நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கின்ற நிலையும் உருவாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மன்னாகண்டல் பகுதியில் வெள்ளநீர் வீதியை குறுக்கறுத்துப் பாய்வதால் வீதிப் போக்குவரத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், தண்ணிமுறிப்புக் குளத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர், அதனைவிடவும் வட்டுவாகல் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், வவுனிக்குளம் வான் பாய்வதால் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, இதனைவிட பாலியாறு பெருக்கெடுத்து பாய்வதால் சிறாட்டிக்குளம் மக்கள் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,126 குடும்பங்களை சேர்ந்த 3,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கிளிநொச்சி ,மன்னார் மற்றும் வவுனியாவிலும் வெள்ள அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின் இரணைமடுக்குளம் நிரம்பியுள்ளதால் தாழ்நிலப்பிரதேசங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மன்னார் -பூநகரி ஏ-32வீதி கரியாலை நாகபடுவான் குள பெருக்கெடுப்பால் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு  சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கப்பட்டுவருகின்றது.


No comments