சுவஸ்திகா வரமுடியாது:ஆசிரிய சங்கம்!
விடுதலைப்புலிகளை பாசிஸ்ட்டுக்கள் என விமர்சித்த கொழும்பு மைய சட்டத்தரணி சுவஸ்திகாவை யாழ்.பல்கலைக்கழகத்தினில் அனுமதிப்பதில்லையென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக ஆசிரிய சங்கத்தின் ஒரு சாரரால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடி இன்று வியாழக்கிழமை (09) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் "நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்" என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார். இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே விடுதலைப்புலிகள் தொடர்பிலான சுவஸ்திகாவின் நிலைப்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அவரை வரவேற்க தாங்கள் தயாரில்லையெனவும் இன்று ஊடக அறிக்கையொன்றை ஆசிரிய சங்கம் விடுத்துள்ளது.
Post a Comment