இராணுவ துணைப்படைக்கு மரணதண்டனை!



கிளிநொச்சி  பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என  குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இலங்கை இராணுவ துணைப்படைப்பிரிவை சேர்ந்த ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட  கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

மாத்தளை  பகுதியைச்  சேர்ந்த  இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி  கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள்  தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர்  அப்பெண்  சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு  அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை கைது செய்திருந்தனர்.   

அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி,  அந்த பெண்,  இறுதியாக வைத்திருந்த  அலைலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா  அதிபர் திணைக்களத்தினால்  கிளிநொச்சி மேல் நீதிமன்றில்  குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குக்கான தீர்ப்பை, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் வழங்கினார்.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments