தமிழகத்திலிருந்து வருகை தந்தால் சிறை!

 




தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து 33 ஆண்டுகளின் பின்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய வடமராட்சி கிழக்கு, குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை நீடிக்க  பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

போர் காரணமாக குடத்தனை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா நாகேஸ்வரி (வயது-58), அவரது மகளான சின்னராஜா சுதர்சினி (வயது-42) மகனான சின்ன ராஜா சுதாகரன் (வயது-39) ஆகியோர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தனர்.

தற்போது படகு மூலமாக தாயகம் திரும்பி குடத்தனை பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றில் தங்கி  இருந்தபோது இலங்கை காவல்துறையால்; கடந்த மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் நேற்று புதன்கிழமை (15) முற்படுத்தப்பட்ட போது அவர்களின் விளக்கமறியலை நீதி மன்றம் நீடித்துள்ளது.

இதனிடையே தமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். 

அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை ஐந்து வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். 

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு  இருந்த 22 கடற்தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கின் போது அவர்களில் ஒரு கடற்தொழிலாளர் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாத பகுதியில் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை ஐந்து வருடங்களுக்கு மன்று ஒத்திவைத்து இருந்தது. 

இந்நிலையில் அக்கடற்தொழிலாளர் மீள கைது செய்யப்பட்டமையால் அவருக்கான முற்குற்றத்திற்கான 18 மாத சிறைத்தண்டனையுடன் தற்போது விதிக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


No comments