காவல்துறையை கைது செய்யவேண்டும்!



இலங்கை காவல்துறையின் சித்திரவதை காரணமாக அப்பாவி தமிழ் இளைஞன் மரணித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

சித்தங்கேணியில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில் உடல் முழுவதும் அடிகாயங்கள், இயற்கையான மரணம் இல்லையெனவும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டவைத்திய அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்..

உயிரிழந்தவரின் சடலம் இன்று( 20)  நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவர் நேற்று உயிரிழந்திருந்தார்.

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த 8ஆம் திகதி இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக விடுவிக்கப்படாத நிலையில் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்கவாலரின் காவலுடன் உயிரிந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்தார்.

உயிரிழப்பினையடுத்து வட்டுக்கோட்டை காவல்; நிலையத்தின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே குற்றமிழைத்த காவல்துறையினர் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதோடு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோருவதாக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


No comments