இனநாயகமே ஜனநாயகமானால் அநீதியே நீதியாக மாறிவிடும்!பனங்காட்டான்


குட்டித்தீவில் இதுவரை எத்தனை நீதிபதிகள் தங்கள் பதவிகளில் தப்பியுள்ளனர். எத்தனை பிரதம நீதியரசர்களுக்கெதிராக பதவி நீக்க

(இம்பீச்மென்ற்) நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு 2013ல் என்ன நடைபெற்றது? இதுவெல்லாம் தெரியாதவரல்ல ''காணாமற்போயுள்ள்'' நீதிபதி சரவணராஜா. 

குட்டித்தீவில் காணாமற்போயுள்ள நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பான வாதங்களும், விவாதங்களும், போராட்டங்களுமே இப்போதைய முக்கிய அரசியல். ''காணாமற்போயுள்ள'' என்று குறிப்பிடுவதற்கான காரணம், அவர் எங்கே இப்போது இருக்கிறார் என்று தெரியாத நிலையில், அல்லது அதிகாரபூர்வமாக எவரும் குறிப்பிட முடியாத நிலையில் இருப்பதுவே. 

நீதிபதி சரவணராஜா  கனடா சென்றுவிட்டதாக ஒரு வதந்தி. சுவிஸிற்கு சென்றுவிட்டதாக இன்னொரு வதந்தி. மேற்கு நாடொன்றுக்குச் செல்லும் வழியில் இடைத்தரிப்பாக சிங்கப்பூரில் நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. 

கொழும்பில் அவர் தனது வாகனத்தை விற்றார் என்றும், இரண்டு நாடுகளின் ராஜதந்திரிகளை கொழும்பில் அவர் சந்தித்தாரென்றும் புலனாய்வாளர்களின் அறிக்கையை அடிப்படையாக வைத்து பகிரங்கமாகக் கூறுபவர்கள், எவ்வளவு தூரம் அவரை புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்தார்கள் என்பதை சொல்லப்போவதில்லை. 

இந்த நிலையில் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு காணாமற்போயுள்ளதாகல் அவரும் இப்போதைக்கு காணாமலாக்கப்பட்டிருப்பவர் என்ற வகையறாக்குள் தள்ளப்பட்டுள்ளாரென்று துணிந்து கூறலாம். அவரது துணிச்சல்தான், புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்த நிலையிலும் அவரை தப்பிச்செல்ல வைத்திருக்கிறது என்று கூறவேண்டும். 

நீதிபதி சரவணராஜா  விவகாரம் தொடர்பாக இப்போது அதிகம் பேசுபவர் அல்லது தன்னிலை விளக்கம் கொடுப்பவர் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர. இலங்கையின் தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் அக்கிராசனர் இவரே என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 

தாம் ஒருபோதும் நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லையென்றும், அச்சுறுத்தல் விடுக்கவில்லையென்றும், குருந்தூர்மலை விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்குள்ள சிறப்புரிமையின் கீழ் உரையாற்றியதை உயிர் அச்சுறுத்தல் எனக் கூறமுடியாதெனவும் விளக்கமளித்து வருகிறார். 

சரத் வீரசேகர சாதாரண ஒரு எம்.பி. அல்ல. கடற்படையில் அட்மிரல் பதவி வகித்த உயர் அதிகாரி. கோதபாய ராஜபக்சவின் வியத்கம உள்வட்டத்தின் முக்கியஸ்தர். இவரது சகோதரரான மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர யுத்த காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட ராணுவ இணைப்பதிகாரியாக பணியாற்றியவர். 2007ல் ஓய்வு பெற்ற பின்னர் பௌத்த பிக்குவாக மாறி அம்பாறை குகைக் கோவிலில் புத்தங்கல ஆனந்த தேரோவாக இருந்து 2021ல் காலமானவர். 

இந்தப் பின்னணிகளை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இலங்கையின் அரசியல் வழித்தடத்தில் ''உயிர் அச்சுறுத்தல்'' என்பதன் அர்த்தம் என்னவென்று சரத் வீரசேகரவுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டுமென்பதை நினைவூட்டவே. கையில் கத்தியுடனோ, தோளில் துப்பாக்கியுடனோ சென்று பயப்படுத்துவது மட்டும்தான் உயிர் அச்சுறுத்தல் அல்ல. ஒருவரை இலக்கு வைத்து தாக்க, கடத்திச் செல்ல, கொலை செய்ய, காணாமலாக்கக்கூடியதான முறையில் தூண்டக்கூடிய வகையில் உரை நிகழ்த்துவதும் உயிர் அச்சுறுத்தலே என்பது  படைத்துறை குடும்பத்தைச் சேர்ந்த சரத் வீரசேகரவுக்கு தெரியாதெனச் சொல்ல முடியாது. 

எவ்வகையிலாவது நீதிபதி சரவணராஜாவை கைது செய்து அரசியல் மயப்படுத்தப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்து சிறைக்குள் தள்ள வேண்டுமென்ற அடிப்படை நோக்கம் சரத் வீரசேகரவுக்கு இருந்தது. அல்லது நீதிபதி மீது காடையரைக் கொண்டு தாக்குதல் நடத்துவதன் மூலம் இவருக்கு மட்டுமன்றி மற்றைய நீதிபதிகளுக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டுமென்ற எண்ணமும் இருந்துள்ளது. 

இந்த நோக்கங்களுடன் அவர் தொடர்ந்து நீதிபதி மீது ''தாக்குதல்'' உரைகளை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோது அதனைத் தடுக்காத சபாநாயகர், நீதியமைச்சர், பிரதமர் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதை அவர்களின் மௌனத்தின் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையில் அரசியல்வாதிகள் மீது பதவி நீக்க (இம்பீச்மென்ற்) பிரேரணைகள் முன்னெடுக்கப்பட்டனவாயினும் அவை தோல்வியடைந்தன. ஆனால், நீதித்துறையில், நீதிபதிகள் பிரதம நீதியரசர்கள் போன்றவர்கள் மீதான பதவி நீக்கும் முயற்சிகள் சகல கட்சிகளின் ஆட்சிக்காலங்களிலும் சாதாரணமானவையாக நிகழ்ந்துள்ளன. 

ஜே.ஆர்.ஜெயவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த காலத்திலிருந்து அவர் தனிப்பட்ட வழக்கறிஞராக பல வருடங்கள் இருந்தவர் நிவில் சமரக்கோன். முன்னர் ஒருபோதும் நீதிபதியாகக்கூட இருந்திராத இவரை பிரதம நீதியரசராக நியமித்து, இவர் முன்னிலையில் 1978 பெப்ரவரி 4ம் திகதி ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்தார் ஜெயவர்த்தன.

சில ஆண்டுகளின் பின்னர் பொது வைபவம் ஒன்றில் ஜெயவர்த்தனவை இவர் விமர்சித்து உரையாற்றியதால் அப்போதைய பிரதமர் ஆர்.பிரேமதாச தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு இவரை குற்றவாளியென அறிக்கையிட்டு பதவி நீக்கப் பிரேரணைக்கு முன்னறிவிப்பு கொடுத்தது. பிரதம நீதியரசர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார் நெவில் சமரக்கோன். 

2001ல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த வேளையில் அவரது அணியைச் சேர்ந்த 77 எம்.பி.க்கள் ஒப்பமிட்டு அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவை பதவி நீக்கும் பிரேரணைக்கு முன்னறிவிப்புக் கொடுத்தனர். ஆனால், அப்போதிருந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் அந்த முயற்சியை சந்திரிகா தரப்பால் தொடர முடியாது போய்விட்டது. 

2021 மே மாதம் 18ம் திகதி ஷிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்தார் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஒரு வருடம் முடிவடைவதற்குள்ளேயே பிரதம நீதியரசரின் சில தீர்ப்புகள் மகிந்தவினால் ஜீரணிக்க முடியாது போயிற்று. நாட்டிலுள்ள எந்தக் காணியையும் அரசுடைமையாக்கும் சட்டமூலம், திவி நெகும சட்டமூலம் ஆகியவைகளை ஷிரானி பண்டாரநாயக்க தலைமையிலான உச்ச நீதிமன்றம் நிராகரித்ததால், அவரை பதவி நீக்கும் நடவடிக்கையில் மகிந்த இறங்கினார். நாடாளுமன்றத்தில் 155 எம்.பிக்களின் ஆதரவு இருந்ததால் பதவி நீக்கப் பிரேரணை இலகுவாக நிறைவேற ஷிரானி பண்டாரநாயக்க வீடேகினார். 

காலியான பிரதம நீதியரசர் பதவிக்கு முன்னர் ஒருபோதும் சாதாரண நீதிபதியாகக்கூட பதவி வகித்திராத மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்து அந்தக் கதிரைக்கே கறை பூசினார் மகிந்த. மகிந்தவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மொஹன் பீரிஸ் எவ்வாறு துணைபுரிந்தாரென்பதை எழுதினால் ஒரு புத்தகமாக்கலாம். 

ஷிரானியின் பதவி நீக்கத்துக்கு முன்னர் முக்கிய வழக்கொன்றின் தீர்ப்பினை விசாரணை செய்த மேல் நீதிமன்ற நீதிபதிகளான அனில் குணரத்தின, எஸ்.சிறீஸ்கந்தராஜா ஆகியோர் இனந்தெரியாதோர்களால் அச்சுறுத்தப்பட்டது நேரடியான கொலைப் பயமுறுத்தலாக பதிவானது. 

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது கொழும்பு மாவட்ட நீதிபதி ஒருவரின் வீட்டுக்கு தொடர்ச்சியாக கல்லெறி இடம்பெற்றது. காடையர் கூட்டம் அவரது வாசஸ்தலத்தைச் சுற்றி எவரும் வெளியேற முடியாது அச்சப்படுத்திக் கொண்டிருந்தது. நீதிபதி என்ற வகையில் தமக்கான பாதுகாப்புக்கு பொலிஸாரின் உதவியை நாடினார். ஆனால் அவரின் அழைப்புக்கு பொலிஸார் செவி சாய்க்கவில்லை. நீதிபதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டாமென்று ஷபெரியவர்| உத்தரவிட்டாரென்பது பகிரங்கமானது. 

1983ம் ஆண்டில் இன்னொரு சம்பவம் இடம்பெற்றது. அரசுக்குச் சார்பாக ஒரு வழக்கில் தீர்ப்பளிக்க ஒப்புக்கொள்ளாததாகக் கூறி நீதியரசர்கள் விமலரட்ண மற்றும் கொலின்-தொம் ஆகியோரை பதவி நீக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. 

பிரேமதாசவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்க லலித் அத்துலத் முதலியும் காமினி திசநாயக்கவும் எடுத்த பதவி நீக்கப் பிரேரணை முயற்சி முறியடிக்கப்பட்டது. அப்போதைய சபாநாயகர் எம்.எச்.மொஹமட் இவ்விடயத்தில் பிரேமதாச பக்கம் சாய்ந்து பிரேரணையை ரத்தாக்கினார். இது நீதித்துறை சார்ந்ததல்ல. அரசியல்மயப்படுத்தப்பட்ட செயற்பாடு. 

மேலே குறிப்பிடப்பட்ட நீதியரசர்கள் மீதான பதவி நீக்க முயற்சிகளின் வரலாறு நீதிபதி சற்குணராஜாவுக்குத் தெரியாததல்ல. அதனால்தான் அவர் சமயோசிதமாக நாட்டை விட்டுத் தப்பிச்செல்ல திட்டமிட்டிருக்கலாம். 

அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க அவர் நேரில் வரவேண்டும் என்பதுவும், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால் நீதிபதி என்ற பதவி வழியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அவருக்கு அதிகாரம் இருந்தது என்பதுவும், தமக்கான நீதிபதி அதிகாரங்களை எதற்காக அவர் பயன்படுத்தவில்லையெனக் கேட்பதுவும்.... இவையெல்லாம் வெற்றுப் பேச்சுகள். 

ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரும் அது தொடர்பான கொலை வழக்கை நடத்துவதே சட்டம். சம்பந்தப்பட்டவர் நாட்டில் இல்லையென்றாலும் நீதி விசாரணை நீதியாக நடைபெற வேண்டியது கட்டாயம். இதற்காகவே இன்று போராட்டம் நடைபெறுகிறது. 

இனநாயகத்தின் மேலாண்மை ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்ட நாட்டில், அநீதி என்பதுவே நீதியாக உலா வருகிறது. சட்டத்துறையும் நீதிபரிபாலனமும் அரசியலாளர்களின் பொக்கற் நாய்களாக மாறிவருகின்றன. 


No comments