போராட்டத்தில் முன்னணியும் ஆதரவு?

தற்போது முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு ஏற்பட்ட நிலைமை நாளை சிங்கள நீதிபதிகளுக்கும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பாரிய மனித சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ள ஊடகப்பேச்சாளர் சுகாஸ் "முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கப்படவேண்டும். அவரது உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும்.

இந்த இடத்திலாவது சிங்கள சகோதர்களும் புத்தியீவிகளும் தமிழ் மக்களினது நியாயமான கோரிக்கைகளை புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

அல்லது இன்று நீதிபதி சரவணராஜாவிற்கு ஏற்பட்ட நிலைமையே நாளை சிங்கள நீதிபதிகளுக்கு ஏற்படும். அந்த நேரத்தில் நீங்கள் போராடி பிரயோசனம் இல்லை.

ஏனென்றால் அந்த நேரத்தில் உங்களுடைய நாடு சீனாவிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ காலனித்துவ நாடாக மாறியிருக்கும்.

எனவே சிங்கள மக்களும் எமக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்" என சுகாஸ் தெரிவித்துள்ளார்.


No comments