சுமா சகிதம் சாம் வந்தார்?



நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதான கோரிக்கை மத்தியில் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் இரா.சம்பந்தனை  எம்.ஏ.சுமந்திரன் சகிதம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம்; இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக ஊடகங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இரா. சம்பந்தன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை."என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வருங்காலம் நாடாளுமன்றத்தால் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய உலகறிய எமது அவலங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத் தெரியப்படுத்தி, இலங்கை சம்பந்தமான பொதுக் கருத்தை வெளிநாடுகளில் எமது புலம்பெயர் சகோதரர் வாயிலாக எழ வைத்து எமது நாட்டின் அரசாங்கத்துக்குப் போதிய நெருக்குதல்களை ஏற்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை பாரப்படுத்தினால் எமக்கு நன்மைகள் கிடைக்கலாம். அப்போதுகூட சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைய சிங்கள அரசியல்வாதிகள் ஆயத்தமாக உள்ளார்கள்.

தமிழர்களின் உரிமைகளை வழங்குவதிலும் பார்க்க எவரிடமும் நாம் மண்டியிடத் தயார் என்பதே அவர்களின் மனோநிலை. இந்த விதத்தில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை அறிய அவர்களின் இதுவரை கால அவலங்களை அறிய, அவர்களின் அபிலாசைகளை அறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் நாடும் முக்கிய நபர் இரா.சம்பந்தனே.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரைச் சந்தித்தார். அவரைப் புறக்கணிக்கவோ - நீக்கவோ முனைவது தமிழ் மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். அவர் வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம்.

அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை. அவரில் பல குறைகள் இருந்துள்ளன இருக்கின்றன எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments