முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை நாளை மறுதினம் திங்கட்கிழமை நேரில் சமூகமளிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்காகப் பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரச பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முதற்கட்டமாகத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக விடயம்சார் அறிவுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவரின் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துகொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ளதால், கோரப்படும் ஆவணங்களுடன் நாளை மறுதினம் திங்கட்கிழமைகாலை 09.30 மணிக்கு அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழுவினால் பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தன்மை தொடர்பிலான அறிக்கையொன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சின்னமொன்றை தாபிக்கும் போது பின்பற்றப்படவேண்டிய நடமுறைகள் தொடர்பிலான அறிக்கையொன்று, நினைவுத் தூபியை நிர்மாணித்ததற்குரியதான கொள்முதல் கோப்பு மற்றும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் நினைவுத் தூபியின் தற்போதைய நிலைமை தொடர்பிலான அறிக்கையொன்று போன்ற விடயங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தினுள் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு வழிவகுப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.
அதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டு முழுமைபெறாத நிலையில் இருந்த தூபி இடிக்கப்பட்டது.
தூபி இடிக்கப்பட்டதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனவரி 09 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. அதனையடுத்து 11 ஆம் திகதி அதிகாலை மாணவர் பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது உரிய அனுமதிகள் பெறப்பட்டு தூபி அமைக்கப்படும் எனத் துணைவேந்தரால் உறுதியளிக்கப்பட்டது.
அதன் பின்னர், நிலைமை தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவையில் விளக்கமளிக்கப்பட்டு அதற்கான அனுமதி பெறப்பட்டதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தூபி அமைப்பதற்காகப் பல்கலைக்கழக நிதி பயன்படுத்தப்படுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
தன்னார்வ நன்கொடையாளர்களிடமிருந்து அப்போதைய மாணவர் ஒன்றியத்தினர் சேகரித்த நிதியைப் பயன்படுத்தி தற்போதைய தூபி அமைக்கப்பட்டதுடன், தூபி கட்டப்பட்டதற்கான நிதி விபரங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கணக்கறிக்கையில் காட்டப்பட்டதுடன், கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட அறிக்கை பல்கலைக்கழக நலச் சேவைகள் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment