யாழில். மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலில் இருவர் கைது


மோட்டார் சைக்கிளைகளை திருடி , திருடிய மோட்டார் சைக்கிள்களில் சென்று வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் , கொடிகாமம் , மட்டுவில் , சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் வழிப்பறி கொள்ளையர்கள் வீதியில் செல்வோரிடம் சங்கிலி , தாலிகொடி என்பவற்றை அறுத்து வருவதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. 

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், மோட்டார் சைக்கிள் இலக்கம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என்பன தெரிய வந்தன. 

அதனை தொடர்ந்து வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்ற பகுதிகளில் காணப்பட்ட கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்க உதவியவர்கள் , அதனை வாங்கியவர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments