33 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கவுள்ள வலி. வடக்கு பிரதேச சபை உப அலுவலகம்


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன சுமார் 33 வருடங்களின் பின்னர், எதிர்வரும் புதன்கிழமை முதல் சொந்த கட்டடத்தில் இயங்கவுள்ளதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. 

யுத்தம் காரணமாக வலி, வடக்கில் இருந்து 1989 ஆம் ஆண்டு கால பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்த போது , அலுவலகம் மற்றும் நூலகம் என்பனவும் இடம்பெயர்ந்த்து. 

இடம்பெயர்ந்த நூலகம் மற்றும் அலுவலகம் என்பன யாழின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த நிலையில் , 2016ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள் மீள் குடியேற தொடங்கினர். 

அக்கால பகுதியில் காங்கேசன்துறையில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், வடக்கு பிரதேச சபை அலுவலக கட்டடம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தமையால், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் வலி.வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன இயங்கி வந்தன. 

இந்நிலையில் இந்த வருட ஆரம்ப கால பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் கட்டடம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட சில பகுதிகளை இராணுவத்தினர் விடுவித்து இருந்த நிலையில், சுமார் 33 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் புதன் கிழமை முதல் தனது சொந்த கட்டடத்தில் வலி.வடக்கு பிரதேச சபை உப அலுவலகம் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
No comments