லிபியாவில் வெள்ளப் பேரழிவு: 2084 பலி! 10,000 பேரைக் காணவில்லை!!


வடகிழக்கு லிபியாவில் வெள்ளைத்தை ஏற்படுத்திய புயலில் குறைந்தது 2084 பேர் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 10,000 பேர் காணப்போயுள்ளனர். 20,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியாவை டேனி புயல் தாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. புயலுடன் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது.

பெங்காசியை தளமாகக் கொண்ட லிபியாவின் கிழக்கு நிர்வாகம், 3,000 பேர் இறந்ததாக மதிப்பிடுகிறது.

கிழக்கு துறைமுக நகரமான டெர்னாவில் மட்டும் 1,000 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

வார இறுதியில் பெய்த கனமழையால் அணைகள் உடைந்து, முழு மாவட்டங்களையும் அடித்துச் சென்றதால், இடிபாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்கத் தொடங்கியுள்ளன.

லிபியாவில் உள்ள ஐஆர்எஃப்சி தூதுக்குழுவின் தலைவர் டேமர் ரமதான், இறந்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியது மற்றும் ஆயிரக்கணக்கானவர்களை எட்டக்கூடும் என்று கூறினார்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதுவரை 10,000 பேரைத் தாண்டியுள்ளது என்பதை எங்களின் சுயாதீன தகவல் மூலங்களிலிருந்து நாங்கள் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

உதவி செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத் தலைவர் ஜோசப் பொரெல், அவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.


No comments