ரஷ்யா வருகிறார் கிம் ஜாங் உன்


வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் செவ்வாயன்று ரஷ்யா வந்தடைந்தார் என்று தென் கொரியாவின் இராணுவ மற்றும் ரஷ்ய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

அங்கு அவர் ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியாவின் கிம் ஜாங் உன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தொடரூந்தைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்ததாக வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் நம்புகிறது.

பியோங்யாங்கிலிருந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கவச தொடரூந்தில் கிம் ஏறியதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அவருடன் ஆளும் கட்சி மற்றும் இராணுவத்தின் குறிப்பிடப்படாத உறுப்பினர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிம்மின் கரும் பச்சை நிற தொடரூந்துப் பெட்டிகளை, ப்ரிமோர்ஸ்கி பகுதியில் ரஷ்ய ரயில்வே இன்ஜின் மூலம் இழுக்கப்படுவதைக் காட்டும் புகைப்படங்களை ரஷ்யாவின் ஆர்ஐஏ நோவோஸ்டி செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு கிம்மின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்த சந்திப்பு இருக்கும். ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள விளாடிவோஸ்டாக் நகரத்தில் சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியாவிடமிருந்து ஆயுத தளபாடங்களை வாங்குவதற்கான ஒரு சந்திப்பாக புடின் - கிம் சந்திப்பு அமையும் என ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

வடகொரியாவின் ஆயுத உதவிக்குப் பதிலாக கிம் செயற்கைக்கோள்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தனது ஏழ்மையான தேசத்திற்கான உணவு உதவியை கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், தேவைப்பட்டால் புடினும் கிம்மும் ஒருவரையொருவர் சந்திக்க முடியும் என்று கூறினார்.

No comments