ஈராக்கில் திருமண கொண்டாட்டம்: 113 பேர் பலி!!


இன்று புதன்கிழமை வடக்கு ஈராக்கில் ஒரு திருமண கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 113 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நினிவே மாகாணத்தில் மொசூல் அருகே அல்-ஹம்தானியா நகரில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

திருமண நிகழ்வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சிக்கி கொண்டனர். 

திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற முடியாமல் அவர்கள் திணறினர். மண்டபம் முழுவதும் கரும்புகை பரவியது. இதனால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

திருமண வரவேற்பின் போது தீப்பிடித்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய விருந்து மண்டபத்தில் பணிபுரியும் குறைந்தது ஒன்பது பேர் நினிவே மாகாணத்தில் இருந்து பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹனீன் மற்றும் ரிவான் என்ற தம்பதியினர் காயமடைந்தவர்களா அல்லது இறந்தவர்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இறப்பு எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கு பட்டாசுகளே காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஈராக் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் தீப்பற்ற கூடிய பொருட்கள் அந்த மண்டபத்தில் இருந்துள்ளன. பாதுகாப்பு நடைமுறைகள் குறைபாடும் இதற்கு ஒரு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments