சஜித்தை படுகொலை செய்ய திட்டமாம்


தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

விவசாயம் விடியல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 40 வருடங்களின் பின்னர் கிரிதிஓயா இயக்கத்திற்கு சொந்தமான தென் கால்வாயை புனரமைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்திலுள்ள சிலர் புதிய செய்தியொன்றை தற்போது பரப்பி வருகிறார்கள்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக களமிறங்கினால், சஜித் பிரேமதாஸ களமிறங்க மாட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்படி கூறுவோர் யார்?

நான் கடந்தமுறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியபோது, கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, எனக்கெதிராக சதித்திட்டம் தீட்டி, என்னை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தவர்கள் தான் இவர்கள்.

நான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக களமிறங்குவேன். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டுமெனில் முதலில் நான் உயிருடன் இருக்க வேண்டும்.

நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதில்லை என்று இவர்கள் கூறுவதைப் பார்க்கும்போது, எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்படுமோ என்ற சந்தேகமும் எனக்கு எழுகிறது.

ஏனெனில், நான் களமிறங்குவேன் என நானே உறுதியாகக்கூறும்போது, அவர்கள் நான் களமிறங்கப் போவதில்லை எனத் தெரிவித்து வருவதானது, நான் அப்போது உயிருடன் இருக்க மாட்டேன் என்பதைப் போன்றுதான் உள்ளது.

நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். நான் என்றும் மரணத்திற்கு அஞ்சியதில்லை. எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க நான் என்றும் தயாராகவே உள்ளேன்.

2019 இலும் நான் சவாலுக்கு முகம் கொடுத்தேன். கட்சிக்குள்ளேயே எனக்கெதிராக சதி செய்யப்பட்டது.

இதற்கு நாம் முகம் கொடுத்து 56 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை நாம் பெற்றுக் கொண்டோம்.

2019 இல் எமக்கு எதிராக வாக்களித்தவர்கள்கூட இன்று நல்ல பாடத்தை கற்றுக் கொண்டுள்ளார்கள்.

இந்த அரசியல் வாழ்க்கையில், ஒரு தடவைக்கூட ராஜபக்ஷக்களுடன் டீல் அரசியல் செய்யாத ஒரே நபர் நான் தான் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

ஏனைய அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ராஜபக்ஷக்களுடன் தொடர்பில் தான் இருந்தார்கள்.

நாம் 220 இலட்சம் மக்களுடன் தான் டீல் செய்துக் கொண்டுள்ளோம். மக்களுடன் தான் ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளோம்.

இதனை பாதுகாக்கவே நாம் நடவடிக்கை எடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments