ஹரக் கட்டாவுக்கு உதவிய கான்ஸ்டபிளின் தாய் உள்ளிட்ட இருவர் கைது


திட்டமிடப்பட்ட குற்றசெயல்களில் ஈடுபடும் ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவி புரிந்து தற்போது தப்பியோடியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் அவரின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 தலைமறைவாகியுள்ள பொலிஸ்  கான்ஸ்டபிள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. 

 தலைமறைவாகியுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 

 இவ்வாறான பின்னணியில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

 இருப்பினும் அது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.  

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டா, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பணம் வழங்கியுள்ளதாக இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

குறித்த நபர் திருகோணமலை பகுதியில் அண்மையில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நெற்காணியை கொள்வனவு செய்துள்ளார். 

 அத்துடன் அதிகளாவான பணத்தை தமது பெற்றோர் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments