மேர்வின்: துணிவிருந்தால் வருக! சவால்
ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
"இது சிங்கள பௌத்த நாடு. நான் வடக்கு, கிழக்கிற்கு வருவேன்.நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு வருவேன்" என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறி இருப்பது பௌத்தத்தின் பெயரால் புத்தனின் போதனைகளை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல.
நாட்டின் சட்டத்தை மிதித்து, இனவாத, மதவாத வன்முறையை தூண்டும் வக்கிர நச்சுவார்த்தை என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு, ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் இவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வணபிதா சக்திவேல் அடிகளார்; தெரிவித்துள்ளார்.
இதனிடையே மேர்வின் சில்வாவிற்கு துணிவிருந்தால் வாளுடன் வடக்கிற்கு வருகை தர முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் சவால் விடுத்துள்ளார்.
இன்றுக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்; சந்திப்பில் கருத்து வெளியிட்ட விந்தன் கனகரட்ணம் மதவெறியினுடைய உச்சபட்சக் கருத்தாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்து அமைந்துள்ளது.
தென்னிலங்கையிலே அவர் ஒரு கோமாளியாக அரசியலில் கடந்த காலங்களில் பார்க்கப்பட்டு வந்திருக்கிறார். தன்னுடைய தொகுதி மக்களே அவரை நிராகரித்த விடயங்களும் இருக்கின்றன.
இப்பொழுது அவர் எந்தக் கட்சியில் அங்கம் வகிக்கின்றார் என்றே தெரியாத நிலை இருக்கிறது.
நான் மேர்வின் சில்வாவிற்கு கூறுகின்ற விடயம், உங்களது சண்டித்தனத்தை களனியில் வைத்திருங்கள்.
முடியும் என்றால், வாளை எடுத்துக்கொண்டு வடக்கு கிழக்கிற்கு வந்து பாருங்கள். அதை நீங்கள் செய்வீர்கள் என்றால், உங்களை நாங்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் - உங்களுக்கு எப்படி பதிலடி தர வேண்டும் என்பது வடக்கு கிழக்கில் இருக்கிற தமிழர்களுக்கு தெரியும்” என்றார்.
Post a Comment