பொங்க தடையில்லை!


   

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நாளை வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள பொங்கல் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என இலங்கை காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொங்கல் வழிப்பாட்டை தடுக்க எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் முல்லைத்தீவு நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.

குருந்தூர் மலையில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் இடம்பெற்றால் இரண்டு குழுவினருக்கிடையில் ஏற்படக் கூடிய கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் அது மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என முல்லைத்தீவு காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குருந்தூர்மலையின் அமைவிடத்தின் அடிப்படையில் கலவரம் ஏற்படுமாயின், அதனை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும் எனத் தெரிவித்து காவல்துறையினர், பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக தடை உத்தரவை கோரியிருந்தனர்.

இந்நிலையில் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மத வழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதேவேளை, குருந்தூர் மலை தொல்பொருள் பாதுகாப்பு காப்பகமாக காணப்படுவதனால் நாளைய தினம் எவ்வாறு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான நிபந்தனைகளை தொல்பொருள் திணைக்களம் விதித்துள்ளது.


No comments